Sunday, December 15, 2013

மற்றவரின் கருத்துக்கள் நம்மை பாதிப்பதா?

வாழ்க்கையில் நாம் தினமும் வித விதமான மனிதர்களையும் அவர்களின் பேச்சு மற்றும் செயல்களையும் பார்த்தும் கேட்டும் வருகிறோம். இவர்களில் சிலரின் பேச்சுக்கள் அடுத்தவரின் மனநிலையை புண்படுத்துமாறு அமைந்து விடுகிறது. உதாரணத்திற்கு  சில:

சாலையில் நடந்து செல்லும்பொழுது எதிரில் தெரிந்தவர் ஒருவர் பார்த்து, என்னப்பா, ஆள் இளைத்து போய்விட்டாய், உடனே டாக்டரைப் பார்.  பெரிய பெரிய வியாதிகளுக்கு எல்லாம் இதுதான் ஆரம்பம் என்று பெரிய அறிவாளி போல் சொல்லிவிட்டு போய்விடுவார். கேட்டவர் மனம் கலங்க ஆரம்பித்து விடும்.

ஒரு குழந்தை பிறந்ததின் புண்ணியதான விழாவாக இருக்கும். அதில் ஒரு பெண்மணி,  என்ன, இரண்டாவதும் பெண் குழந்தையே பிறந்துள்ளது என்று சொல்லிவிட்டு, இருக்கட்டும், இந்த காலத்தில் பெண்கள்தான் பிற்காலத்தில் காப்பாற்றுவார்கள் என்றும் சொல்லிவைப்பார். அந்த தாயின் மனம் எவ்வளவு பாடுபடும்?

திருமண விழாவில் முன்வரிசையில் ஒருவர்,  என்ன கொஞ்சம் பொறுமையாக பார்த்திருந்தால், இன்னும் கொஞ்சம் நிறமான பொண்ணாக இருந்திருக்கலாம்.  எல்லாம் பணம் செய்யும் வேலை, என்ன செய்வது? என்று பேசி வைப்பார்.  

இப்படி பல சமயங்களில் சிலரின் பேச்சு இப்படித்தான் உள்ளது. தேவையில்லாத விசயத்தை பேசி பிரச்னைகள் வருவதும் உண்டு. நாம் ஒரு விசயத்தைப் பற்றி பேசும் பொழுது எதிரே இருப்பவரின் இடத்தில் நாம் இருந்தால் எப்படி என்ற கோணத்தில் யோசித்துப் பேசவேண்டும். வாய்மை என்பது  எவருக்கும் தீங்கு இல்லாமல் பேசுவதே என்று திருவள்ளுவர் சொல்லியுள்ளார். 

சரி, இப்படி வரும் பேச்சுக்களை நாம் எப்படி எதிர்கொள்வது? கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவதுதான் சிறந்த வழி. ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உண்டு. NOBODY CAN MAKE YOU FEEL INFERIOR WITHOUT YOUR CONSENT “  என்பதே. அதாவது, நீங்கள் அனுமதிக்காத வரையில், யாராலும் நீங்களே உங்களை குறைவாக நினைத்துக் கொள்ளும்படி செய்ய முடியாது.    

மற்றவர்கள் உங்களைப் பற்றி கூறும் தப்பான கருத்துகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்பது இதன் பொருள். ஒரு அலுவலகத்தில் உங்களைத் தெரியாத ஒரு குமாஸ்தா உங்களை சரியாக நடத்தாமல் பேசியிருப்பார்.  பேருந்தில் நடத்துனர் உங்களை திட்டி இருக்கலாம். இவற்றையெல்லாம் மனதில் வைத்து கவலைப்படுவது வீண் வேலை. உங்களைப் பேசியப் பிறகு அவர்கள் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். உங்களை மறந்தே இருக்கலாம். இப்படித்தான் போகிற போக்கில் சிலர் சொல்லிவிட்டு போவதும்.  நமது மனம் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. அதில் இப்படி  கவலைகளையும் பயத்தையும் வைப்பது மனதின் செயல்பாட்டை வெகுவாக குறைப்பதோடு உங்கள் உண்மையான திறமையும் வெளிப்படாது.

வாழ்க்கையில் சரி என்பதற்கும் தப்பு என்பதற்கும் அளவுகோல் எதுவும் இல்லை. ஒருவருக்கு சரி எனப்படுவது இன்னொருவருக்கு தப்பாக இருக்கலாம். ஒரு நாட்டில் நல்லது என்பது இன்னொரு நாட்டில் கெட்டதாக இருக்கலாம். ஒரு ஆங்கிலேய பெண்மணி நமது நாட்டிற்க்கு சுற்றுலாவில் வந்தார். நமது சுற்றுலா அமைச்சகத்தின் ஏற்பாட்டில் சென்னையில் ஒரு வீட்டில் சில நாட்கள் தங்கினார். அந்த சமயத்தில் அந்த வீட்டு பெண்ணிற்கு திருமணம் நடக்க இருந்தது. அந்த பெண்ணிடம், மாப்பிள்ளையைப் பற்றிக் கேட்டார். அந்த வீட்டு பெண், எனது பெற்றோர் பார்த்து சொன்னார்கள், நான் இன்னும் மாப்பிளையிடம் சரியாக பேசவில்லை என்று சொல்லியுள்ளார். அதற்கு அந்த ஆங்கிலேயப் பெண்மணி, என்னது, முன்பின் தெரியாத ஒருவரை திருமணம் செய்யப் போகிறாயா? என ஆச்சரியப்பட்டு கேட்டாராம். காதலிப்பது சரியல்ல இங்கு, ஆனால் காதலிக்காமல் கல்யாணம் செய்வது சரியல்ல அங்கு.

எனவே, சரி என்றும் தப்பு என்றும் எதுவும் இல்லை. ஒவ்வொன்றும் ஒரு அனுபவம்.  அந்த அனுபவத்தில் இருந்து நமக்கு ஏற்படும் விளைவுகளைக் கொண்டு பாடங்கள் பெற்று அதன் அடிப்படையில் அடுத்த அடியை எடுத்து வைப்போம்.

எவரோ ஏதோ சொல்கிறார் என்பதற்காக கவலை வேண்டாம். தெளிவாக இருங்கள். தைரியமாக செயல்படுங்கள்.

பின்குறிப்பு : 14.12.2013 தி இந்து தமிழ் நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையை வாசித்ததின் விளைவாக எழுதிய பதிவு இது. 

Robin Sharma எழுதியுள்ள  The Monk who sold his ferrari என்ற நூலிலும் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் எழுதியுள்ள எண்ணங்கள் என்ற நூலிலும் இக்கருத்தைப் பற்றி மேலும் விரிவாக சொல்லப்பட்டு உள்ளது.



Monday, December 9, 2013

நான்கு மாநில மற்றும் ஏற்காடு தொகுதி சட்டமன்ற தேர்தல்

டெல்லி, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் ஆகிய நான்கு மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. இந்த முடிவுகளைப் பற்றிய ஒரு அலசல்.

டெல்லி, ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியும், மத்திய பிரதேசம் மற்றும் சத்திஸ்கரில் பி.ஜே.பி. ஆட்சியும் நடந்து வந்தன.  இதில் டெல்லியை தவிர மற்ற மூன்று மாநிலங்களிலும் தனியாக ஆட்சி அமைக்க கூடிய அளவிற்கு பி.ஜே.பி. பெரும் வெற்றி பெற்றுள்ளது.  டெல்லியில் தனி பெரும் கட்சியாக வெற்றி அடைந்துள்ளது,  எனினும் ஆட்சி அமைக்க இன்னும் நான்கு உறுப்பினர்கள் தேவை.  இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க ஒரு விசயம்,  அர்விந்த் கேஜ்ரிவால் என்பவரால் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி என்ற  புதிய கட்சி டெல்லியில் மொத்தம் உள்ள 70 இடங்களில் 28ல் வெற்றி பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக வந்துள்ளது. இவர் ஊழலுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டி உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹசாரே உடன் இணைந்து இருந்தவர்.

இந்த தேர்தல் முடிவுகளால் தெரிய வருபவை :

காங்கிரசிற்கு மக்கள் ஆதரவு அளிக்கவில்லை. மக்கள் ஒரு நல்ல மாற்று வேண்டுமென விரும்புகிறார்கள்
.
மோடியின் அலை இருப்பதாக சொல்ல இயலவில்லை. ராஜஸ்தானில் வெற்றி பெற்றது இயல்பே என்கிறார்கள். நமது பக்கமுள்ள கேரளவைப்போல் ஆளும் கட்சியை ஒவ்வொரு தேர்தலிலும் மாற்றுவது கடந்த சில தேர்தல்களில்  அங்கு தொடர்ந்து வருகிறது. இப்போதும் அது நடந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் சவுகான் அவர்களின் ஆட்சி சிறப்பானது என மோடியை முன்னிறுத்தும் பொழுதெல்லாம் பேசப்பட்டு வந்துள்ளது. மூன்றாவது முறையாக அவர் முதல்வர் ஆவது அவரது ஆட்சியின் பலனாகும். சட்டிஸ்கரில் முடிவு பி.ஜே.பி. எனினும் காங்கிரஸ் இங்கு நல்ல போட்டியை கொடுத்துள்ளது. ஓட்டு எண்ணிக்கையின் இடையில் காங்கிரஸ் பெரும்பாலான சமயங்களில் முன்னிலையில் இருந்துள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் ?

கடந்த சில தேர்தல்களில் மக்கள் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை அளிக்கவில்லை.  கூட்டணி ஆட்சியே நடந்து வருகிறது.  சுதந்திரத்திற்கு முன்பே இருந்த  கட்சி என்பதால் காங்கிரஸ் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ளது.  அந்த கட்சியாலேயே பெரும்பான்மை பெற இயலவில்லை. அடுத்த பெரிய கட்சியான பி.ஜே.பி க்கு  இந்தியாவின் கிழக்கு, வட கிழக்கு மற்றும் தெற்கு மாநிலங்களில் போதுமான பலம் இல்லை. எனவே இந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கும் என்று தோன்றவில்லை. காங்கிரஸ்க்கு உள்ள எதிர்ப்பு உணர்வை மோடியின் அலையாக மாற்ற பி.ஜே.பி. அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்பது உறுதி. அந்தந்த மாநிலங்களில் உள்ள மாநில கட்சிகள் வெற்றி பெற நல்ல வாய்ப்பு உள்ளது.

ஏற்காடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. கடந்த பல வருடங்களாக தமிழ் நாட்டில் நடைபெறும் சட்டமன்ற இடைதேர்தல்களில் ஆளும் கட்சிதான் வெற்றி பெற்று வருகிறது. எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்று செயல்பட்டு அதனை இரண்டு ஆளும் கட்சிகளும் (தி.மு.க, அ.தி.மு.க)  செய்தும் காட்டி வருகின்றன. இந்த இடைதேர்தல் வெற்றி அல்லது தோல்வியினால் ஆட்சி மாறப்போவது இல்லை. 5 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்யட்டும் என ஒரு கட்சியை மக்கள் தேர்ந்தெடுத்து விடுகிறார்கள். இடையில் ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ. இறந்து விட்டால், அந்த எம்.எல்.ஏ எந்த கட்சியோ அந்த கட்சியே ஒருவரை அந்த இடத்திற்கு நியமித்து கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டால் என்ன?. இதனால் எவ்வளவு பணம், நேரம், அரசுக்கும், கட்சிகளுக்கும் மிச்சம் என்பது உங்களுக்கு தெரியும். இன்னொரு முக்கியமான விசயம், இந்த ஏற்காடு தேர்தலில் தி.மு.க வின் நிர்வாகி ஒருவர் கலவரத்தில் மரணம் அடைந்து விட்டார்.  ஓட்டுக்கு கொடுத்த பணத்தை கணவன் வீண் செலவு செய்துவிட்டதாக சண்டையிட்டு ஒரு பெண் தனது சிறுவயது மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வந்துள்ளது. இதனை எல்லாம் தவிர்க்க  மேற்சொன்னபடி அறிவித்து விடலாமே.


Wednesday, December 4, 2013

கதையும் காரணமும்

பொதுவாக  கதைகள்  மற்றும் கற்பனைகளைப்  பற்றி  எழுதுவதில்லை என்ற விதியை எனக்கென வகுத்துக் கொண்டு பதிவு எழுத ஆரம்பித்தேன்.  ஆனால் எதிலும் ஒரு விதி விலக்கு இருக்குமல்லவா?  அதுதான் இப்பதிவு.

நேற்றைய (03.12.2013) தி இந்து தமிழ் நாளிதழில் கதை ஒன்று படித்தேன். கதையின் சாராம்சம் இதுதான் :  லட்சுமி என்பவள் அவரின் அம்மா சீதனமாக கொடுத்த பழங்காலத்து அண்டா ஒன்றை கழுவி வெளியில் வைத்து உள்ளாள். இவள் வீட்டுக்கு உள்ளே சென்ற சமயத்தில் அண்டா காணாமல் போய்விட்டது. பக்கத்து வீட்டுக்காரி மீது சந்தேகம், ஆனால் அவள் எடுக்கவில்லை என்று சத்தியம் செய்கிறாள்.  குளித்து விட்டு ஈர சேலையோடு அங்காத்தா கோயிலில் சென்று வேண்டிகொள்ளும்படி ஒருவர் யோசனை சொல்கிறார்.  ஆத்தா கோயிலில் தாயத்து மந்தரித்து அவள் வீட்டு வாசலில் போட்டு விடு, அவள் குடும்பமே அழிந்துவிடும் என்கிறார் இன்னொருவர்.  அவளிடம் கொஞ்சம் மிளகாய் வாங்கி அதை சாந்தாக அரைத்து ஆத்தா மீது பூசிவிடு,  ஆத்தா துடித்து அவளை பலி வாங்கிவிடுவாள் என்கிறார் இன்னொரு பெண்மணி. 

லட்சுமி சரியென,  ஆத்தாவிடம் முறையிட அங்காத்தா கோயிலுக்கு செல்கிறாள். கோயிலில் ஒரே கூட்டம்,  போலீஸ் வேறு இருக்கிறது. என்னவென்று விசாரித்ததில்,  ஆத்தாவின் 50 பவுன் நகைகளை இரவு யாரோ திருடிவிட்டார்களாம்.  லட்சுமி பேசாமல் திரும்பி வந்துவிட்டாள்.

கதையின் உட்கருத்து தெரிந்ததே.  ஆனால் இந்த கதை எப்படி இந்து குழுமத்திலிருந்து வரும் ஒரு பத்திரிகையில் வெளிவந்துள்ளது. மிக மிக ஆச்சரியமான ஒரு விசயம். பத்திரிகை தர்மம் என்பது,  நமக்கு உடன்பாடு இல்லாத கருத்தாக இருந்தாலும் எழுதுபவரின் உரிமையை மதித்து நாம் வெளியிட வேண்டும் என்பதாக சொல்வார்கள்.

தி இந்து ஆசிரியர் குழுவிற்கும் நிர்வாகத்திற்கும் பாராட்டுக்கள்.

**************************************************************************************

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்  நான்  பார்ப்பது செய்திகள், விவாதங்கள் அடுத்து திரைப்படப் பாடல்கள்.  கதைத் தொடர்களை பெரும்பாலும் பார்ப்பதில்லை. ஆனால் இதில் ஒரு விதி விலக்கு.  விஜய் தொலைகாட்சியில் இரவு பத்து மணிக்கு ஒளி/ஒலிபரப்பாகும் OFFICE  என்ற தொடரைப் பார்ப்பதுண்டு.

காரணம், அதில் வருகிற விசுவநாதன் என்னும் பாத்திரம்.  ஒரு கணினி நிறுவனத்தின் Country Head ஆக  கதையில் வருகிறார்.  ஒரு நிறுவனத்தை எவ்வாறு நடத்துவது? வேலை செய்பவர்களின் பதவிக்கேற்ற பொறுப்புகள் மற்றும் உரிமைகள் என்னென்ன?  என மிக அழகாக விளக்குகிறார். அவர் வரும் காட்சிகள் அனைத்தும் நிறுவன மேலாண்மை குறித்த வகுப்பு எடுப்பது போல் உள்ளது. மிகவும் அருமை. குழுவாக வேலை செய்வதன் நோக்கம், அதன் பலன் போன்றவற்றை தெளிவாக விளக்குகிறார். ஊழியர் தவறு செய்யும்போது அதனை விசாரிக்கும் விதம், தண்டனை எனில் அதன் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என விளக்குவது, என நிறைய விசயங்களை நேயர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் அன்று வேலை செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்டவருக்கு தெரியாமல் அவருடன் நடைபெறும் உரையாடலை பதிவு செய்வது மரபல்ல எனவும் இன்னும் பல கருத்துக்களை அவர் மூலம் சொல்கிறார்கள். வசனம் எழுதியவர் பெரும் பாராட்டுதலுக்கு உரியவர். இத்தொடரைப் பார்த்தால், ஒரு அலுவலகத்தை செம்மையாக நிர்வாகம் செய்ய யோசனைகள் கிடைக்கலாம். 

மேலும் காதல், காதலரிடையே ஏற்படும் ஊடல், நட்பு, அதனால் வரும் விட்டு கொடுக்கும் பண்பு  என மனதின் துல்லியமான உணர்வுகளையும் வெளிக்கொணரும் வண்ணம் வசனங்களும் காட்சி அமைப்புகளும் உள்ளன. நகைச்சுவை காட்சிகளும் நன்றாக உள்ளன.

இயலுமெனில்,  பாருங்களேன்.


.

கணக்கு எழுதுங்கள்

     வாரம் ஒரு பதிவு எழுதலாம் என ஆரம்பித்தும் வேலை பளு காரணமாக கடந்த சில வாரங்களில் எழுத இயலவில்லை. இன்று ஒரு எளிமையான ஆனால் மிகவும் அவசியமான ஒரு விசயம்.

காசேதான் கடவுளப்பா! அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா!! என்பது கவிஞர் வாலி எழுதிய திரைப் பாடல்.
1968ம் ஆண்டு சக்கரம் என்ற படத்திற்காக எழுதியது. அனுபவம் வாய்ந்த எவ்வளவு உண்மையான வரிகள். அந்த கடவுளை மிகவும் கவனமாக கையாளவேண்டும். அதற்க்கு முக்கியமான ஒரு வழி, கணக்கு எழுதுவது. மிகவும் எளிதான ஒரு செயல்தான். தினமும் இரவில் படுக்கச் செல்லும் முன்பாக ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி அன்றைய வரவு செலவுகளை ஒரு நோட்டு புத்தகத்தில் எழுத வேண்டும். இதை யாருக்கும் காண்பிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் மட்டும் பார்த்துக் கொண்டாலே போதும். கணினி வைத்து இருப்பவர்கள் அவர்களுக்கு தெரிந்த வகையில் Excelவடிவிலோ அல்லது Tally மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். அன்றைய தினத்தில் உங்களுக்கு லாபமோ அல்லது நட்டமோ எதுவானாலும் எழுதி வையுங்கள். ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்டு என்பது பழமொழி. எதற்கும் ஒரு கணக்கு இருக்க வேண்டும்.
 
     இதனால் ஏற்படும் நன்மைகள் பலப் பல.
 
   அன்றைய தினம் நீங்கள் செய்த பணிகள், நடந்து கொண்ட விதம் தெரியவரும். (வாழ்ந்த வகை என்றும் சொல்லலாம்)
 
   கொடுத்த பணம், வந்த பணம் எதனையும் பிற்காலத்தில் மறந்து போகலாம். ஆனால் கணக்கு எழுதினால் அதற்கு அவசியமில்லை.
 
   செலவு செய்கின்ற அளவு வரவுக்குள் இருக்கிறதா என பார்க்கலாம். அவசியமெனில் செலவைக் குறைக்கவோ அல்லது வருவாயை பெருக்கவோ முயற்சி செய்யலாம்.
  
   கணினியில் பதிவு செய்யும்பொழுது உங்கள் செலவுகளை வகைப்படுத்த முடியும், அப்போது எந்த வகையில் அதிகம் செலவு செய்கிறோம் என்பதனை பார்த்து அதனை நெறிப்படுத்தலாம்..

இன்னும் நிறைய பலன்கள் உள்ளன. வாங்கவேண்டிய பணம், கொடுக்க வேண்டிய பணம் அனைத்தும் நினைவுக்கு வரும். உங்கள் வரவு செலவு அறிக்கை தயார் செய்ய, வருமான வரி செலுத்த அனைத்திற்கும் இது பயன்படும்.

கணக்கு எழுதிப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையை ஒரு ஒழுங்கிற்குள் கொண்டு வந்தது போல் உணர்வீர்கள்.

கணக்கு எழுதுங்கள். திறம்பட வாழுங்கள். வாழ்த்துக்கள்