Sunday, September 29, 2013

BE POSITIVE

உள்ளூர் நண்பன் முதல் உலக பேரறிஞர் வரை பலர் இந்த தலைப்பில் நிறைய பேசியுள்ளனர்.  எழுதியும் உள்ளனர். மனதின் அமைப்பு, அதில் ஏற்படும் எண்ணங்கள், அதன் தாக்கங்கள் என பலவித கோணங்களில் அலசப்பட்டு எழுதப்பட்டுள்ளது. 

என் பங்கிற்கு இப்போது........

ஒரே ஒரு விஷயம் மட்டும்.  நிகழ்வுகளை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதை பற்றி.....

ஒரு நிகழ்வில் நாம் எதிர்பார்த்தபடி  முடிவு இருந்தாலோ அல்லது லாபமான விஷயம் எனில்  மகிழ்ச்சி, இல்லையென்றால் வருத்தம். ஆனால் எந்த ஒரு விசயத்திலும் இன்பம், துன்பம், மகிழ்ச்சி, வருத்தம் என்பது அவரவர் அந்த விசயத்தை எப்படி எடுத்து கொள்கிறார்கள் என்பதில் இருக்கிறது என சொல்லப்படுகிறது. 

நான் ஒரு கம்பெனியில் பணி புரியும்பொழுது மும்பையில் ஒரு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன். அந்த பயிற்சியை நடத்தியவர் சொன்னது: எல்லா விசயங்களிலும் நல்லதும் உள்ளது. கெட்டதும் உள்ளது.  நீங்கள் அதில் உங்களுக்கு நல்லது என தோன்றும் கருத்தை மட்டும் உள்வாங்கி அதன் அடிப்படையில் அந்த விசயத்தை பார்க்கவேண்டும். எல்லா நிகழ்விற்கும் இது பொருந்தும் என்றார். (இறப்பிற்கும் கூட.) அவரது தந்தை இறந்த விசயத்தைப் பற்றிக் கூறினார். அவரது பெற்றோர் ஆன்மீக பயணமாக ஹரித்வார், ரிஷிகேஷ் போன்ற இடங்களுக்கு சென்ற பொழுது ஒரு இரவில் பேருந்தில் வந்ததாகவும், காலையில் பார்க்கும்பொழுது அவர் அப்பா உயிருடன் இல்லை என்றார். இது மிகவும் துக்கமான விஷயம். எனினும் இவர் இதில் மற்ற விசயங்களையும் பார்க்க வேண்டும் என்கிறார். 1. தூக்கத்தில் உயிர் பிரிந்து விட்டது. நோய் வயப்பட்டு படுத்த படுக்கையில் கஷ்டப்பட வில்லை. அமைதியான நிகழ்வு. 2. இவருடன் சேர்த்து நான்கு  மகன்கள். நால்வரும் நல்ல நிலையில் உள்ளனர். மகன்கள் அனைவருக்கும் செய்யவேண்டியதை செய்துள்ளார். 3. இவரது அம்மாவின் மடியில் இருக்கும் பொழுது உயிர் பிரிந்துள்ளது. எங்கோ அனாதையாக இறக்கவில்லை. 4. கோயில்களுக்கு செல்லும் வழியில் கடவுளின் அருகில் இறந்துள்ளார்.  இப்படி சுமார் 9 விசயங்களை கூறினார்.   எந்த ஒரு விசயத்திலும் நல்லதொரு கருத்து கண்டிப்பாக இருக்கும் என்கிறார். கீதையில் சொல்வது போல எது நடந்தாலும் நல்லதிற்கே என கொள்வோம். 

நல்ல மழை பெய்கிறது என்று வைத்துக்கொள்வோம்.  ஒரு வேலைக்கும் வெளியில் போக முடியவில்லை. வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டியுள்ளது என்றால் வருத்தம். இந்த வருடமாவது நல்ல மழை பெய்யட்டும். தண்ணீர் பஞ்சம் தீரும் என்று நினைத்தால் சந்தோசம்.

இந்த பழமொழிகளைப் பாருங்கள்.

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.
பன்றியோடு சேர்ந்த கன்றும் கெடும்.
ஆள் பாதி, ஆடை பாதி.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
தாயும் பிள்ளையுமென்றாலும் வாயும் வயிறும் வேறு.
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்.
  
ஒன்றுக்கொன்று முரணாக உள்ளதல்லவா? அப்படியென்றால் பழமொழிகள் தப்பா?  இல்லை. பழமொழிகள் எப்போதும் தப்பானவை அல்ல.  அவை வாழ்க்கையை வாழ்ந்த அனுபவத்தில் சொன்னவை. இவை ஒவ்வொன்றையும் அந்தந்த இடம் மற்றும் பொருள் கொண்டு அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படித்தான் நிகழ்வுகளையும் பலவிதமாக அர்த்தப்படுத்தலாம்.  நல்லதை மட்டும் சீர் தூக்கி பார்த்து அணுக வேண்டும்.

ஒரு நதி ஓடி கொண்டு உள்ளது. அதன் கரையில் உள்ள மரத்திலிருந்து இரண்டு இலைகள் நதியில் விழுந்து விட்டன. இரண்டும் நதியின் ஓட்டத்தில் அடித்து செல்லப்படுகின்றன. ஒரு இலையின் நினைப்பு : நாந்தான் இந்த நதியை நடத்தி செல்கிறேன். என் பின்னால்தான் இந்த நதி வருகிறது என்று அந்த இலை சந்தோசமாக செல்கிறது.  இன்னொரு இலையின் நினைப்பு : இந்த நதி என்னை தள்ளுவதா? நான் இந்த நதியை தடுத்து நிறுத்துகிறேன் பார் என்று முட்டி மோதி வருத்தத்தில் வருகிறது.
நிகழ்வு ஒன்றுதான்.  ஆனால் அதை எடுத்து கொள்கிற விதம்தான் இன்பமா துன்பமா என தீர்மானிக்கிறது.

கடைசியில் ஒன்று.  அந்த கடவுளே நினைத்தாலும் நடந்ததை மாற்ற முடியாது.  நடந்தது நடந்துதான்.  அதில் வருத்தப்படவேண்டியதை தூர எறிந்து நல்லதை மட்டும் நினைத்து அடுத்த அடியை நம்பிக்கையுடன் எடுத்து வைப்போம்.

வாழ வேண்டிய இனிமையான தருணங்கள் காத்திருக்கின்றன.

Monday, September 23, 2013

தமிழ் நாட்டுக்கு ஆகாத எட்டாம் எண்

இந்தியாவின் மற்ற எல்லா மாநிலங்களை விட தமிழ் நாட்டிற்கு ஒரு சிறப்பு உண்டு.   மூட நம்பிக்கைகளை ஒழித்து பகுத்தறிவைப் பரப்புவதற்கென தந்தை பெரியாரால் ஒரு இயக்கம் தொடங்கப்பட்டு மிக வெற்றிகரமாக நடத்தப்பட்டு வந்தது/வருகிறது. கடவுள் மறுப்பு, பெண் விடுதலை, மூட நம்பிக்கை ஒழிப்பு போன்றவை   பொதுக்கூட்டங்கள், துண்டு பிரசுரங்கள், நாளிதழ்கள் என பல்வேறு முறைகளில் பிரச்சாரம் செய்து வலியுறுத்தப் பட்டது. 

 ஆன்மீகத்தைப்  பின்பற்றுவதில் தமிழ் நாட்டை விட  நாட்டின் மற்ற மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.  மடாதிபதிகள், துறவிகள், சாமியார்கள் போன்றவர்களும்   மதம் சம்பந்தமான பூஜைகள், சடங்குகள், விழாக்கள் போன்றவைகளும் மற்ற மாநிலங்களில் அதிகம்.  

சரி.... விசயத்துக்கு வருவோம்.

புதிதாக ஒரு வாகனம் வாங்கினோம் என்றால் அதனை இயக்குவதற்கு முன்பாக நமது பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து அதற்க்கான பதிவு எண்ணை பெற வேண்டும். ஒவ்வொரு வட்டார அலுவகத்திற்க்கும் ஒரு எண் உள்ளது.  உதாரணமாக  TN 01 A 0000 என்பதில் TN 01 சென்னை  அயனாவரத்தில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தைக்  குறிக்கும்.  கடைசி நான்கு இலக்கங்கள் அந்த குறிப்பிட்ட வாகனத்திற்கு உரியது.    இவை நீங்கள் யாவரும் அறிந்ததே.

ஆனால்  தமிழ் நாட்டில், எட்டு  மற்றும் கூட்டுத் தொகை எட்டு கொண்ட எண்கள்  எந்த ஒரு அலுவகத்திற்க்கும்   எந்த ஒரு வாகனத்திற்கும் வழங்கப்படுவது இல்லை.  மற்ற மாநிலங்களில் எட்டுக்கு இந்த நிலைமை இல்லை.

 பின் வரும் அட்டவணையை  கவனிக்கவும்.
பதிவு எண்
அலுவலகம்
TN 07
சென்னை திருவான்மியூர்
TN 08
இல்லை
TN 09
சென்னை கே. கே. நகர்
TN 16
திண்டிவனம்
TN 17
இல்லை
TN 18
சென்னை செங்குன்றம்
TN 25
திருவண்ணாமலை
TN 26
இல்லை
TN 27
சேலம் (பழையது)
TN 34
திருச்செங்கோடு
TN 35
இல்லை
TN 36
கோபிசெட்டிபாளையம்
TN 43
நீலகிரி மாவட்டம்
TN 44
இல்லை
TN 45
திருச்சி மேற்கு
TN 52
சங்ககிரி
TN 53
இல்லை
TN 54
சேலம் கிழக்கு
TN 61
அரியலூர்
TN 62
இல்லை
TN 63
சிவகங்கை
TN 70
ஓசூர்
TN 71
இல்லை
TN 72
திருநெல்வேலி

மற்ற மாநிலங்களில்  எட்டு இலக்கமாக  கொண்ட அலுவலக பட்டியல் இதோ.
Regn. No.
Office  at
Regn. No.
Office at
AP 08
Guntur
WB 17
Hooghly
KL  08
Thirussur
AP 26
Nellore
KA 08
Kolar Gold Fields(KGF)
KL 26
Adoor
MH 08
Ratnagiri
KA 26
Gadag
GJ  08
Banaskhanda
MH 26
Nanded
DL 08
North West Delhi
GJ 26
Tapi
WB 08
Kolkatta (to be used)
WB 26
Barasat
AP 17
Krishna Dt.
AP 35
Vizianagaram
KL 17
Muvattupuzha
KA 35
Hospet
KA 17
Davangere
KL 35
Palai, Kottayam
MH 17
Shrirampur
MH 35
Gondia
GJ 17
Godhra
GJ 35
To be allotted
DL 17
Noida
WB 35
To be allotted
(தமிழில் மொழி பெயர்க்கும் பொழுது  ஊரின் பெயர்களில் எழுத்து பிழைகள் வருவதை தவிர்க்க ஆங்கிலத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது)

தமிழகத்தில் இவ்வாறு  எட்டு என்ற எண்ணை அரசாங்கமே தவிர்ப்பதற்கு ஏதேனும் நியாயமான காரணங்கள்  இருக்குமா?  இந்திய அரசு ஒரு மத சார்பற்ற அரசு என்கின்ற பொழுது இப்படி நடப்பது சரியா ?   அல்லது  இன்னும் நாம் மூட நம்பிக்கைகளை விட வில்லையா?


சிந்திப்போம்.  இயலுமெனில் தீர்வு காண்போம். Sunday, September 15, 2013

விநாயகர் சதுர்த்தி

தமிழகத்தில் விநாயக கடவுள் ஆதி முதல் இருந்தாக வரலாறு இல்லை.  இடையில் பல்லவ மன்னர்களால் வாதாபியிலிருந்து போரின் போது கொண்டு வரப்பட்டதாக அறியப்படுகிறது.

சமீபமாக சில பல ஆண்டுகளாக  தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை மக்கள் விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.  பிரம்மாண்ட சிலைகள் அமைப்பது,  பின்பு அதனை கடல்,  ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில் கரைப்பது என நிகழ்ந்து வருகிறது.

விஷயம் என்னவென்றால்,  நேற்று சென்னையில் இருபது கிலோ எடை கொண்ட வெள்ளி விநாயகர் சிலையை இவ்வாறு கடலில் போட்டு உள்ளனர். இதன் மதிப்பு சுமார்  ரூபாய் பத்து லட்சம் .  இந்த பத்து லட்சத்தை கடவுளின் பெயரால் கடலில் போடத்தான் வேண்டுமா? 

எத்தனை மக்கள் உணவுக்கு கஷ்டபடும்  நிலையில்,  எவ்வளவு குழந்தைகள் திறமை இருந்தும் படிக்க வசதியில்லாத நிலையில், எவ்வளவு மக்கள் நோய் கண்டு குணப்படுத்த பணம் இன்றி இருக்கும் நிலையில், இப்படி பத்து லட்சம் ரூபாயை வீணடிப்பது எவ்வளவு அறிவீனம்?


இந்த செயலை அந்த விநாயகரே மன்னிக்க மாட்டார்.