Thursday, March 6, 2014

சஹாரா கம்பெனி செய்ததுதான் என்ன ?


கடந்த சில நாட்களாக சஹாரா கம்பெனியின் தலைவர் சுப்ரதா ராய் கைது பற்றி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

உச்ச நீதிமன்றம் இவரை கைது செய்ய ஆணையிட்டு உத்தரபிரதேச அரசின் போலிசாரால் கைது செய்யப்பட்டு வனத் துறைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்படுகிறார். 04.03.14அன்று  உச்சநீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது இவர் முகத்தில் கறுப்பு மை வீசப்பட்டுள்ளது. நீதிபதிகள் இவரை கண்டித்து  பேசி இவருடன் மற்ற இரண்டு இயக்குனர்களையும் 11ம் தேதி வரை சிறையில் வைக்க உத்தரவிட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன் மும்பையில் திரைப்பட உலகை சார்ந்த சிலர், பத்திரிகையாளர் கூட்டத்தை ஏற்பாடு செய்து அதில் இவரைப் பற்றி புகழ்ந்து பேசி உள்ளார்கள். நல்லவர், தர்மவான், கலையின் மீது ஆர்வம் கொண்டு உதவுபவர் என்று சொல்லியுள்ளார்கள்.  நிருபர்கள் சஹாரா நிறுவனம் பணம் திரட்டிய விதங்களைப் பற்றி கேட்டபொழுது பதில் சொல்ல முடியாமல் கூட்டத்தை  பாதியில் முடித்து விட்டார்கள்.

அப்படி என்னதான் பிரச்னை?  பார்ப்போம்.

கடன் பத்திரங்கள் மூலமாக பொது மக்களிடமிருந்து சுமார் 20000 கோடி ரூபாயை சஹாரா குழுமத்தின் இரு நிறுவனங்கள் திரட்டியதாகவும் அதனை விசாரிக்கவேண்டும் என்றும் செபி (SEBI – Securities and Exchange  Board of India)  அமைப்பிற்கு  புகார்கள் வந்தன. இந்த சமயத்தில் சஹாரா குழுமம் அதன் இன்னொரு நிறுவனத்தின் பேரில் பங்குகள் வெளியிட அனுமதி கேட்டு செபியிடம் விண்ணப்பித்து இருந்தது. இதில் செபிக்கு சில தகவல்கள் கிடைக்க இதன் அடிப்படையிலும்  செபி விசாரித்தது.

ஒரு நிறுவனம் 50 பேர்களுக்கும் அதிகமான பேரிடமிருந்து  கடன் பத்திரம் மூலம் நிதி திரட்டுவதாக இருந்தால் செபியிடம் அனுமதி வாங்கவேண்டுமாம். சஹாரா வாங்கவில்லை. மேலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த பணியை முடித்து விட வேண்டும். இவர்கள் மாதக் கணக்கில் செய்துள்ளார்கள். சரி, இப்படி முறைப்படி செய்யாததால், வாங்கிய பணத்தை 15% வட்டியுடன் சேர்த்து சுமார் 24000 கோடியையும் பொது மக்களிடம் திருப்பிக் கொடுத்து விடுமாறு செபி உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து சஹாரா மேல் முறையீடு செய்தது. SAT (Securities Appellate Tribunal), அலஹாபாத் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் இப்படி பல தடவை மனுக்கள், முறையீடுகள், விவாதங்கள் என செபிக்கு இந்த விசயத்தில் அதிகாரம் உள்ளதா என்பதிலிருந்து கம்பெனி சட்டங்கள், கடன் பத்திரம் சம்பந்தமான சட்டங்கள் என 2010லிருந்து இரண்டு வருடங்களுக்கு இந்த அமைப்புகளில் மாறி மாறி விசாரணை நடந்தது. கடைசியில்  2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றம் 24000 கோடி பணத்தை  கொடுத்தவர்கள் விவரத்துடன் செபியிடம் ஒப்படைக்கச் சொல்லி  சஹாராவிற்கு  ஆணையிட்டது. 

நீதிமன்றம் சொன்ன கெடுவுக்குள் சஹாரா பணம் கொடுக்கவில்லை. மேலும் கால அவகாசம் கேட்டது. உச்ச நீதிமன்றம் டிசம்பர் 2012ல் தற்போது ரூபாய் 5120 கோடியும், மீதிப் பணத்தை இரண்டு தவணைகளாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தருமாறு உத்தரவிட்டது.  ரூபாய் 5120 கோடியை கொடுத்த சஹாரா மீதிப் பணத்தை கொடுக்கவில்லை.

இதற்கிடையில் சஹாரா சுமார் 127 லாரிகளில் சுமார்  30000 பெட்டிகளில் பணம் கொடுத்த 3 கோடி பேர்களின்  விவரங்கள் என லக்னோவிலிருந்து மும்பை செபி தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தது. அதில் தோராயமாக 20000 பேர்களை எடுத்து அவர்களின் முகவரிக்கு பணம் பெற்றுக் கொள்ளும்படி தகவல் அனுப்பியது செபி.  ஆனால் அதில் 68 பேர் மட்டுமே பதில் அனுப்பினர்.   நிறைய முகவரிகள் / ஆட்கள் இல்லை. நிறைய முரண்பாடுகள் அதில் உள்ளதை செபி கண்டுபிடித்தது.  உதாரணமாக, கலாவதி என்ற பெயர் சுமார் 6000தடவை வருகிறதாம். 

செபி, சஹாராவின் வங்கி கணக்குகளை முடக்கி வைத்தது. அதன் சொத்துக்களை விற்பதற்கு தடை விதித்தது. பணம் கொடுக்கவில்லை என உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது செபி.  20000 கோடி மதிப்பிற்கு வில்லங்கம் இல்லாத சொத்துக்களை செபியிடம் ஒப்படைக்குமாறு சஹாராவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மும்பையில் உள்ள இரண்டு சொத்துக்களின் பத்திரங்களை சஹாரா கொடுத்தது. ஒன்றின் மதிப்பு 19000 கோடி என்றும் இன்னொன்று  1000 கோடி என்றும் சொன்னது.  ஆனால் 19000 கோடி என்று சொன்ன சொத்தின் உண்மை மதிப்பு 118 கோடிதான் என்று செபி கண்டறிந்தது. இதனை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது செபி. 

நீதிமன்றத்தின் உத்திரவுகளை சஹாரா உண்மையுடன் நிறைவேற்றவில்லை என்றும் முன்னுக்கு பின் முரணாக நடப்பதாகவும் கூறி சுப்ரதா ராய் மற்றும் மூன்று இயக்குனர்களும் வெளிநாடு செல்ல தடை விதித்தது உச்ச நீதிமன்றம். வேறு சொத்துக்களை கொடுப்பதாக கூறியது சஹாரா.

ஆனால் கொடுத்த சொத்து பத்திரங்கள் முழுமையாக இல்லை. சொத்தின் தொடர்ச்சியான பத்திரங்கள் மற்றும் மூல பத்திரங்கள் வழங்கப்படவில்லை. இவற்றை விற்பது இயலாத காரியம் என்றது செபி.

கடந்த பிப்ரவரி 21ம் தேதி சஹாராவின் வழக்கறிஞர்களே இந்த பத்திரங்கள் மூலம் சொத்துக்களை விற்க இயலாது என்று உச்ச நீதிமன்றத்தில் ஒத்துக் கொண்டார்கள். நீதிபதிகள், சஹாராவின்  சுப்ரதா ராய் மற்றும் இயக்குனர்களை ஆஜர் ஆக சொல்லி உத்தரவிட்டார்கள்.  அவர்கள் ஆஜராகவில்லை. பின்பு கைது செய்து ஆஜர் செய்யுமாறு போலிசுக்கு ஆணையிட்டனர்.

அவரது அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை, உடன் இருக்க வேண்டும் என்று ஆஜராவதில் விலக்கு அளிக்குமாறு கேட்டதை நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த ஒரு வருடமாக அவ்வப்போது பத்திரிகைகளில் அரை மற்றும் முழு பக்க விளம்பரங்களை சஹாரா தனது நிலையை விளக்கி வெளியிட்டு வருகிறது. இப்போதும்  சுப்ரதா ராயின் அம்மாவின் உடல் நிலை குறித்து மருத்துவர் வழங்கிய சான்றிதழின் நகலோடு பத்திர்கையில் விளம்பரம் வந்தது. நேர்மையாக இருக்கும் பட்சத்தில், இந்தியாவின் மிகப் பெரிய வழக்கறிஞர்களான பாலி. எஸ். நரிமன்,  ராம் ஜெத்மலானி, ஆகியோரைக் கொண்டு வழக்கு நடத்தும் பொழுது நீதிமன்றத்திலேயே இந்த விவரங்களை சொல்லலாமே. எதற்கு இந்த வீண் விளம்பரம்?  இடையில் ஒரு முறை சுப்ரதா ராய்,   தொலைகாட்சியில் இந்த விவகாரம் குறித்து நேரடியாக விவாதம் நடத்த வருமாறு செபியை அழைத்தார்.  

இப்போது 11ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ள நீதிமன்றம் இதில் ஒரு இயக்குனர் பெண் என்பதால் அவருக்கு சிறை செல்வதில் இருந்து விலக்கு அளித்து அவர் மற்ற ஏற்பாடுகளை செய்து கலந்து பேசி இந்த பணத்தை கொடுப்பதற்க்கான சரியான வழிமுறைகளுடன்  வருமாறு அறிவுறுத்தி உள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தின் முக்கியமான ஒரு அமைப்பான பங்குசந்தையின் நம்பகத் தன்மையை காப்பாற்ற வேண்டும். மேலாக நீதிமன்றத்தின் மேல் மக்களின் நம்பிக்கையை உறுதிபடுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது. அதற்கு இப்படியான நடவடிக்கைகள் தேவை எனவும் கூறுகிறது.

சரி, இந்த பணம் உண்மையாக எங்கிருந்து வந்தது?.  சட்ட ரீதியாக ஒரு தப்பை கண்டு பிடித்து அதனை சரி செய்ய வேண்டுமென்றால் எத்தனை இடையூறுகள்? பணமும் செல்வாக்கும் உள்ளவர்களுக்கு வேறு நியதிகளா?

முகநூலில் (Facebook) நண்பர் ஒருவர் எழுதியது :  50 ரூபாய் பிக் பாக்கெட் செய்யும் ஒருவரை கை விலங்கிட்டு சட்டையை கழற்றி ஜட்டியுடன் லாக் அப்பில் வைக்கும் போலிஸ்,   20000 கோடி ஏமாற்றுபவரை கைது செய்து அரசு விருந்தினர் மாளிகையில் வைக்கிறது. சரியா இது?

எல்லா பெருஞ் செல்வங்களுக்கும் பின்னாலும் குற்றம் இருக்கிறது என்று பிரெஞ்ச் நாவலாசிரியர் ஒருவர் எழுதியுள்ளாராம். 

இந்த விசயத்தில் செபி அமைப்பையும் உச்ச நீதிமன்றத்தையும் நாம் வெகுவாக பாராட்ட வேண்டும். சுமார் நான்கு வருடங்களாக இந்த வழக்கை எந்த வித நெருக்கடிகள், அச்சுறுத்தல்களுக்கு (வந்து இருக்கலாம்) வளைந்து விடாமல்  நடத்தி வரும் செபி அமைப்பை பாராட்டுவோம். செபியின் மூத்த வழக்கறிஞர் சென்னையை சேர்ந்த திரு.அரவிந்த் தத்தார் அவர்களும் பாராட்டுக்குரியவர். 

சுருக்கமாக எழுதியதுதான் இது. விரிவாக எழுதினால் பல பக்கங்களுக்கு எழுத வேண்டி இருக்கும்.  


இக்கட்டுரை எழுத உதவிய தி இந்து, Business-Standard, Business line, Times of India, Economic Times, NDTV இணைய தளங்களுக்கு நன்றிகள்.