Sunday, May 25, 2014

புதிய இடுகை

நோட்டா  - பலன் உண்டா?

தேர்தலில் போட்டியிடும்  எவருக்கும் வாக்களிக்க விருப்பமில்லையெனில்  இதை பதிவு செய்வதற்காக NOTA (None Of The Above)  என்னும் வசதி வாக்கு பதிவு எந்திரத்தில் இந்த தேர்தலில் செய்யப்பட்டு இருந்தது. உங்கள் வாக்கை வேறு யாரேனும் போட்டு விடாமல் நீங்களே பதிவு செய்தீர்கள் என்ற ஒரு பலனைத் தவிர வேறு எந்த பயனும் இதில் இல்லை. ஒரு தொகுதியில் 100 ஓட்டுகள் உள்ளது என்று வைத்துக் கொள்வோம். அதில் 80 ஓட்டுகள் பதிவாகி அதில் 60 ஓட்டுக்கள் NOTA விற்கும் 1௦ ஓட்டுக்கள் ஒருவருக்கும் 5, 3, 2 என்ற வகையில் ஓட்டுக்கள் மற்ற சிலருக்கும் கிடைத்தது என்றால் 1௦ ஒட்டு வாங்கியவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். அவர்தான் NOTA போட்டவர்களுக்கு சேர்த்து அந்தப் பகுதியின் அரசாங்க பிரதிநிதி. (எம்.பி, எம். எல். ஏ. அல்லது கவுன்சிலர் இப்படி). NOTA வினால்  வந்த பலன் என்ன? ஒன்றும் இல்லை.  பதிவான வாக்குகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் NOTA பெற்று இருந்தால் அந்த தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்படும் என்று விதி இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் அப்படியில்லையே.

மேலும், ஒருவர் தான் செலுத்திய டெபாசிட் தொகையை திரும்ப வாங்க வேண்டுமென்றால் பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு பங்கினைப் பெற்று இருக்க வேண்டும். இப்போது அதற்கான கணக்கில்,  பதிவான வாக்குகளில் NOTA வின் வாக்குகளை கழித்து மீதி உள்ளதில் ஆறில் ஒரு பங்கு வாங்கினால் டெபாசிட் கிடைக்கும் என உள்ளது. NOTA விற்கு போடும் ஓட்டு ஏறக்குறைய செல்லாத ஓட்டு என்ற கணக்கில் வருகிறது. தேவையா இது?

அர்விந்த் கேஜ்ர்வாலின் நாடகங்கள்

அன்னா ஹசாரேவுடன் இணைந்து ஊழல் ஒழிப்பு இயக்கத்தில் இருந்த அர்விந்த் கேஜ்ர்வால் தனியாக வந்து கட்சி ஆரம்பித்து டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு பெரும்பான்மை இல்லாதபோதும் காங்கிரசின் ஆதரவோடு ஆட்சி அமைத்தார். டெல்லியில் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் ஒத்துக் கொள்ளவில்லை என்று கூறி 49 நாட்களிலேயே பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

இப்போது ராஜினாமா செய்தது தப்புதான், மக்கள் மன்னிக்க வேண்டும் என்று கூறி மறுபடியும் ஆட்சி அமைக்க போவதாக கூறினார். காங்கிரஸ் ஒத்துழைக்காது என்று தெரிந்தவுடன் மறுநாள், இல்லையில்லை, தேர்தலை சந்திப்போம் என்று கூறுகிறார். தெளிவான முடிவெடுக்காமல் எத்தனை தடவைதான் மாற்றி மாற்றி பேசுவது?

பா.ஜ.க வின் முன்னாள் தலைவர் நிதின் கட்காரி ஊழல் செய்தார் என இவர் சொல்ல கட்காரி  வழக்கு போட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜரானார் அர்விந்த். நீதிபதி, இவரிடம்  ஜாமீனில் செல்ல ரூபாய் 10000க்கான பிணை பத்திரம் தாக்கல் செய்ய சொன்னார்.  அர்விந்த், அப்படி எந்த பத்திரமும் தாக்கல் செய்ய முடியாது என்று மறுத்துவிட்டார். இது ஒரு சட்ட நடைமுறை, பத்திரம் தாக்கல் செய்தால்தான் ஜாமீனில் விடமுடியும் என்று கூறியும் கேஜ்ர்வால் மறுத்து விட  நீதிபதி இவரை சிறையில் அடைத்துவிட்டார். ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

நாட்டில் அரசியலமைப்பு சட்டம், குற்றவியல் சட்டம் என பல நடைமுறைகள் இருந்து வருகின்றன. உலகின் பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியா இன்னும் ஜனநாயக முறையில் கட்டுக்கோப்பாக இருந்து வருகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் மக்களும் அரசியல் கட்சிகளும் இந்த சட்டங்களை மதித்து நீதி துறையின் நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடந்து வருவதால் தான். அர்விந்த் ஒன்றும் சட்டத்திற்கு மேலானவர் அல்ல. சட்ட நடைமுறைகளின்படி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வதுதான் முறை.


இவர் தன்னை வித்தியாசமாக காட்டிக்கொள்ள இப்படி நடந்து கொள்வது வெறும் நாடகமாக தெரிகிறது.