Monday, October 28, 2013

தீபாவளி


நாம் கொண்டாடும் முக்கியமான  பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று.  ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு காரணம் உண்டு.  தீபம் என்றால் விளக்கு.  ஆவளி என்றால் வரிசை.  விளக்குகளை வரிசையாக வைத்து கொண்டாடுவது என்று சொல்லப்படுகிறது. முதலில் வட இந்தியாவில் சமண மதத்தவரால் (மார்வாடிகள்) கொண்டாடப்பட்டு பின்பு பரவி மற்ற  இடங்களிலும் உள்ள இந்துக்களும் கொண்டாடும் பண்டிகையானது.

தீபாவளி பண்டிகையை அவர்கள் புத்தாண்டின் தொடக்கமாக பார்க்கிறார்கள்.  புது கணக்கு ஆரம்பித்து வியாபாரம் தொடங்க ஒரு நல்ல நாளாக லட்சுமி பூஜை செய்து கொண்டாடுகிறார்கள். இவர்களுடன் வரவு-செலவு வைத்திருக்கும் நம்மவர்களுக்கு இது தெரியும்.  இதுதான் உண்மையான காரணமும் கூட.   மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகளுக்கு அன்று விடுமுறை கிடையாது.  MUHURAT TRADING  என்று ஒரு சிறப்பு வர்த்தகமும் அன்று நடைபெறும்.

 ஆனால், பார்ப்பனர்கள் தீபாவளி கொண்டாட காரணமாக ஒரு கதை சொல்லி வருகிறார்கள்.  அசுரனை அழித்ததற்க்கான விழாவாம்.  அசுரன் என்பவன் யார் என்றால் ஆரியர்களின் பகைவனாம். ஆர்யர்களின் பகை என்றால் ஆதியில் திராவிடர்தான்.  அப்படி என்றால் நம்மை அழித்ததற்கு நாமே விழா எடுத்து கொண்டாடுவதா? நம் மக்கள் இதையும் நம்பி மதி மயங்கி உள்ளனர்.  இது பொய்யான கதை. தீபாவளிக்கும் இந்த கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இந்த பொய்யான கதைகளை மறுத்து, 

 தமிழ்க்கடல் மறைமலை அடிகள்
திருமுருக. கிருபானந்த வாரியார்
கா. சுப்ரமணிய பிள்ளை
பேராசிரியர் அ. கி. பரந்தாமனார்
கல்வெட்டு ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி
டாக்டர்  மா. இராசமாணிக்கனார்

 போன்ற தமிழ் அறிஞர்கள் விரிவாக ஆராய்ந்து தாங்கள் எழுதிய புத்தகங்களில் பதிவு செய்யுதுள்ளனர். 

 பார்ப்பனர்களின் சூழ்ச்சியான கதைகளை நம்ப வேண்டாமென தந்தை பெரியாராலும்  வலியுறுத்தப்பட்டது.

 இப்படி சொல்லப்பட்டுள்ள கதையும் அறிவுக்கு சம்பந்தமில்லாமல், மேலும் ஆபாசம் நிறைந்தாக உள்ளது. ஒரு அசுரன் பூமியை பாயாகச் சுருட்டிக்கொண்டு எடுத்துக் கடலில் சென்று ஒளிந்து கொண்டதாகவும் விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து அவனை அழித்து பூமியை மீட்டதாகவும்,  பூமித்தாய் பன்றியின் மீது காதல் கொண்டு சேர்ந்ததால் இன்னொரு அசுரன் பிறந்ததாகவும்,  அவன் சுரர்களுக்கு (சுரா என்ற மதுவை குடிப்பதால் தேவர்கள் சுரர்கள்.  தேவர் அல்லாதவர் அசுரர்)  தொல்லையாக இருந்ததால் அவனையும் கிருஷ்ண அவதாரம் எடுத்து அழித்ததாக கதை.

 எவனோ ஒரு முட்டாள் பரதேசி இஷ்டத்திற்கு கதை சொல்லுவான்.  நாமும் அதை ஆமாம் என்று கேட்டுக்கொண்டு கொண்டாட வேண்டுமாம். என்ன கொடுமை இது?

 தீபாவளியை விமர்சையாக கொண்டாடுவதற்க்கான காரணங்கள்.

1.       பண்டிகை என்பது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதி. வாழ்க்கையில் பண்டிகைகளை கொண்டாடத்தான் வேண்டும்.  காலப்போக்கில் சில காணாமல் போகலாம். சில பண்டிகைகள் புதிதாக வரலாம்.

2.       நம் மக்களுக்கு, தை மாதத்தில் கொண்டாடும் பொங்கலுக்கு பிறகு சுமார் எட்டு மாதங்களுக்கு பெரிய பண்டிகை எதுவும் இல்லை. நீண்ட காலம் கழித்து வருவதால் தீபாவளியை பெரியதாக கொண்டாடுவதாக இருக்கலாம்.

3.       அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், இன்னும் பிற முதலாளிகள் அனைவரும் இந்த ஆயுத பூஜை, தீபாவளி சமயத்தில்தான் வருடாந்திர ஊக்கத்தொகை, அன்பளிப்புகள் போன்றவைகளை கொடுக்கிறார்கள். எனவே, நடுத்தர மற்றும் சாமானிய மக்களுக்கு புத்தாடை எடுப்பது, பட்டாசு வெடிப்பது, மருமகனுக்கு விருந்து வைப்பது போன்றவை கொஞ்சம்  எளிதாகிறது.  

தீபாவளியை கொண்டாடுவோம்.  (அசுரனை அழித்ததின் அடையாளமாக என்ற அபத்தமான கதையின் அடிப்படையில் அல்ல)

 வாழ்வில் நல்லதொரு தொடக்கம் அமையட்டும்.  உங்கள் வியாபாரம் நன்றாக தொடங்கட்டும்.  உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்ற விளக்கு வரிசையாக ஒளி வீசட்டும்.  இதுதான் தீபாவளி.

 அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

Monday, October 7, 2013

தங்கமே தங்கம்


தங்கம், உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மதிப்பு வாய்ந்த ஒரு உலோகம்.  பாமரன் முதல் பணக்காரன் வரை அனைவரும் இருப்பு வைத்துக் கொள்ள விரும்பும் சிறந்ததொரு முதலீடு.   நினைத்தவுடன் பணமாக மாற்ற முடிகிற அருமையான சொத்து.

தங்கத்தை பெரும்பாலும் கடைகளில் நாம் வாங்குகிறோம்.  அப்படி வாங்கும்பொழுது ஏற்பட்ட சந்தேகங்களை பதிவு செய்யவே இந்த இடுகை.

1. சேதாரம் :  நகைகளை செய்யும்பொழுது தங்கம் சிறிதளவு வீணாவது உண்டு என்பதால் அதற்கென நகையின் எடையில் ஒரு குறிப்பிட்ட அளவு சேதாரம் என கணக்கிடப்பட்டு அதற்கும் சேர்த்துதான் நாம் பணம் கொடுக்க வேண்டும். இந்த சேதாரத்தின் அளவு நகையில் உள்ள வேலைப்பாடுகளை பொருத்து ஒவ்வொரு நகைக்கும் வேறுபடும். இது இயல்பானதே. ஆனால் கடைக்கு கடை இதன் அளவு மாறுவது ஏன்? இது குறித்து சமீப காலங்களில் சில கடைகள் போட்டி போட்டு கொண்டு எங்கள் கடையில் சேதாரம் குறைவு என விளம்பரம் செய்யவும் ஆரம்பித்துள்ளன.  அதுவும் சில கடைகளில்,  நகையை தெரிவு செய்து   விலையை கணக்கிட்ட  பிறகு அங்குள்ள பெரிய அதிகாரியிடம் சென்று காண்பித்து முறையிட்டால், அவர் சேதாரத்தில் சிறிது குறைத்து தருகிறார்.  ஏன் இப்படி? உண்மையான சேதாரம்தான் எவ்வளவு? ஒரு பவுன் (8 கிராம்) நகை வாங்கினோம் என்றால் இன்றைய மதிப்பின் படி ரூ.21976 செலுத்த வேண்டும். இதில் சேதாரம் 18% எனில், ரூ.3955 அதிகம் சேர்த்து ரூ.25931 கொடுக்க வேண்டும். தங்கம் விலை ஏறினால் எல்லா கடைகளும் விலையை ஏற்றி விடுகின்றன. எந்தவொரு கடையும், வேணாம். இந்த தடவை நாங்கள் விலையை ஏற்றவில்லை. பழைய விலைக்கே விற்கிறோம்என்று சொல்வதில்லை. இறங்கினாலும் அப்படியே.  இந்த சேதார விசயத்திலும் ஏன் ஒரு வரைமுறையை கடைபிடிக்கக் கூடாது?

2. செயற்கை கல்லின் விலை:  கல் வைத்த நகை வாங்கும்பொழுது நகையின் எடையில்  அதில் உள்ள கற்களின் எடையும் சேர்த்து கணக்கிடப்படுகிறது. இந்த கல்லிற்கும் தங்கத்தின் விலையை கொடுக்க வேண்டியுள்ளது. இந்த கற்கள் தங்கத்தின் மதிப்பு பெறுமா?. (ஆனால் நாம் பழைய கல் நகைகளை கடையில் கொடுக்கும்பொழுது அவர்கள் கற்களை நீக்கி விட்டுத்தான் மீதி உள்ள தங்கத்தை எடை போட்டு வாங்குகிறார்கள்.)

ஆனால் வைர நகைகள் வாங்கும்பொழுது வைரத்தை தங்கத்துடன் எடை போடுவது இல்லை. வைரத்திற்கென தனியாக மதிப்பிட்டு பணம் வாங்கப்படுகிறது. ஏன் இந்த முரண்பாடுகள்? இதை நெறிப்படுத்த முடியாதா?

3. தங்கத்தின் தரம்: சில கடைகளின் நகைகள் தரமாக இருக்கும் என்றும் சில கடைகளில் தரம் சுமார்தான் என்றும் மக்கள் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் விலை ஒன்றுதான். இதே கடைகள் நம்மிடம் பழைய நகையை வாங்கும்போது தரத்தின் அளவை நிர்ணயித்து பின்புதான் தொகையை கணக்கிடுகிறார்கள். விற்கும்போழுதும் அப்படியே செய்தால் என்ன?. கணினிமயமாகி விட்ட இந்த காலத்தில் தங்கத்தின் தரத்தை நிர்ணயிப்பது கடினமாக இருக்க வாய்ப்பில்லை.

 இவற்றை ஒழுங்குபடுத்துவது யார் ? அரசுதான் என்பதில் அய்யமில்லை.
 
பங்கு வர்த்தகத்தை முறைபடுத்த SEBI உள்ளது.
காப்பீட்டு (Insurance) கழகங்களை முறைபடுத்த IRDA உள்ளது.
தொலை தொடர்பு கம்பெனிகளை முறைபடுத்த TRAI உள்ளது.
வங்கிகளை கண்காணிக்க RBI உள்ளது.

சமூகத்தின் அனைத்து மக்களும் சம்பந்தபட்ட,  தினமும் பல கோடி ரூபாய் மதிப்பிலான இந்த தங்க வர்த்தகத்தை நெறிபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அரசாங்க கோழி முட்டை அம்மியையும் உடைக்கும் என்பது பழமொழி. அரசால் முடியாதது எதுவும் இல்லை.

 
இவற்றில் ஏதேனும் பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டுமாறு வேண்டுகிறோம்.

மாற்று கருத்துக்கள் இருப்பின், வரவேற்கப்படுகிறது.