Tuesday, October 21, 2014

நியாயமில்லாத தமிழ் பட எதிர்ப்பு.

கடந்த ஓரிரு ஆண்டுகளாக சில தமிழ் திரைப்படங்கள் வெளியிட எதிர்ப்புகள் வருவது வாடிக்கையாகி விட்டது. விஸ்வரூபம், துப்பாக்கி, தலைவா வரிசையில் இப்போது கத்தி என்ற படம் வருவதில் சிக்கலாகிவுள்ளது. ஏன் இப்படி?
நமது நாட்டில் ஒரு படம் வெளிவர வேண்டுமென்றால் அது மத்திய அரசின் தணிக்கை துறை குழுவினரால் பார்க்கப்பட்டு தேவைப்படின் சில நீக்கங்கள் / திருத்தங்கள்  செய்யப்பட்டு சான்றிதழ் அளிக்கபடுகிறது. இதன் அடிப்படையில் பொதுமக்கள் பார்க்க திரை அரங்குகளில் வெளியிடப்படுகிறது. அந்த படத்தில் ஏதேனும் தவறான கருத்தோ காட்சியோ இருந்தால் தணிக்கை துறையிடம் அல்லது நீதி மன்றத்தில் முறையிடலாம். இல்லையெனில் அப்போது போராட்டம் கூட செய்யலாம்.  ஆனால் ஒரு படம் வெளியாகும் முன்னரே அதை தடுப்பது எந்த விதத்தில் நியாயம்? சினிமா எடுக்க வந்து கோடிக்கணக்கில் செலவு செய்து படம் விலையாகாமல் வெளியிட முடியாமல் நஷ்டப்பட்டு நலிந்தவர்கள் ஏராளம். உங்கள் எதிர்ப்பை நியாயமாக முறையிடாமல் தியேட்டரை முடக்குவேன், அங்கு பிரச்சனையை ஏற்படுத்துவேன் என்று சொல்வது அராஜகம் அல்லவா?  அதற்கு காவல் துறையும் பேசாமல் ஒதுங்கி கொள்வது முறையாகுமா? இதே எதிர்ப்பை ஆளும் கட்சியோ அல்லது எதிர் கட்சியோ ஒரு அரசியல் கட்சியில் அங்கமாகி உள்ளவர்களின் படத்திற்கு தெரிவிக்க முடியுமா?
கத்தி படத்தை லைகா என்ற நிறுவனம் தயாரிப்பதாகவும் அது இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு தொடர்பானது எனவும் சொல்லி எதிர்ப்பு..  இப்போது அந்த லைகா என்ற பெயர், தலைப்பில் போஸ்டரில் இடம் பெறக் கூடாது என்று சொல்கிறார்களாம். விநோதமாக உள்ளதல்லவா? படத்தில் முதலீடு செய்து விட்டார்கள். படத்தில் லாபமோ நட்டமோ அதுவும் அவர்களை சேரப் போகிறது. இப்போது பெயர் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? இதே நிறுவனம் இதற்கு முன்னரும் தமிழ் திரைப்படங்கள் தயாரித்து உள்ளதாம். அப்போது இவர்கள் எங்கே சென்றார்கள்?
ஒரு அந்நிய நாட்டு நிறுவனம் நமது நாட்டில் ஏதேனும் துறையில் வணிகம் செய்ய விரும்பினால் அதனை அனுமதிப்பதும் விதி முறைகள் வகுப்பதும் மத்திய அரசுதான்.   ராஜபக்சே மீது வெறுப்பு எனில் இவர்கள்  மத்திய அரசிடம்தான்  முறையிட வேண்டும்.  தமிழர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர் எனவே அவர் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இந்தியாவில் வியாபாரம் செய்ய அனுமதிக்க கூடாது எனவும், மீறினால் போராட்டம் செய்வோம் எனவும் சொல்ல வேண்டும். மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் நிறுவனம் இலங்கையில் கம்பெனி ஆரம்பித்து தொழில் செய்து வருகிறது. ஏர்டெல் மற்றும் இன்னும் சில இந்திய நிறுவனங்கள் அங்கு தொழில் செய்து வருகின்றன. இலங்கையில் சிங்கள மக்களுக்கு நீங்கள் பெட்ரோல் கொடுப்பதால் இங்கு உங்களிடம் பெட்ரோல் வாங்க மாட்டோம் என்று இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் போராட்டம் செய்ய வேண்டியதுதானே?. முடியாது. ஏனெனில், காவல் துறையின் நடவடிக்கை அங்கு பாயும்.
உண்மையான எதிர்ப்பு எனில் முறைப்படி செய்து ராஜபக்சே நிறுவனங்கள் இந்தியாவில் நுழைய தடையை பெறுங்கள்.  உங்களை விட எளியோரிடம் உங்கள் வலிமையை காட்டுவது வீரம் அல்ல. சிந்தியுங்கள்.

ஜனநாயக நாட்டில் ஒரு படத்தை முறைப்படி வெளியிட இவ்வளவு சிரமமா? திரைத்துறையிலிருந்து வந்த அம்மாவின் ஆட்சியிலும் இது முறையாகுமா?