Tuesday, November 19, 2013

இலங்கை வடக்கு மாகாண முதல்வரின் பேட்டி

இலங்கை வடக்கு மாகாண முதல்வரான திரு. சி. வி. விக்னேஸ்வரன் தி  இந்து தமிழ் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் இலங்கை தமிழரைப் பற்றி நமது பெரும்பாலான அரசியல்வாதிகளும் மக்களும்  எண்ணிக் கொண்டிருப்பதற்கு மாறாக கருத்துகள் உள்ளன. 

தமிழீழம் குறித்து  :  ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்பதே வடக்கு மாகாண முதல்வரின் நிலைப்பாடாக உள்ளது.  தமிழக அரசியல்வாதிகள் தமிழீழம் குறித்து பேசி வருவதைப் பற்றி கேட்டால்,  அவர்கள் உணர்வு பூர்வமாக பேசுகிறார்கள்.  நாங்கள் யதார்த்தத்தை உணர்ந்து அறிவு பூர்வமாக, நிதானமாக யோசிக்கிறோம்.  இது உணர்வுக்கும் அறிவுக்கும் இடையிலான போராட்டம் என்கிறார்.

தமிழக மீனவர்கள் கைது பற்றி :  தமிழக மீனவர்கள் இழுவலை படகுகள் மூலம் இந்திய பிராந்தியத்தில் மீன்களை வாரி இழுத்து காலி செய்து விட்டார்கள். இழுவலை படகுகளால் மீன்கள் மட்டுமல்ல, பவளப் பாறைகளும் இழுக்கப்பட்டு அழிந்து வருகின்றன. இலங்கையில் இழுவலை படகு தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழக மீனவர்கள்  எங்கள் பகுதியில் நுழைந்து இரவு ஒரு மணியளவில் அதுவும் எங்கள் கண் பார்வைக்கு எட்டும் தூரத்திலேயே இலங்கையில் உள்ள கடல் வளங்களையும் அழிக்கும் வகையில் மீன் பிடிக்கிறார்கள். இன்று பயன் அடைந்து கொண்டிருப்பவர்கள் இந்த படகுகளுக்கு சொந்தக்காரர்களான பெரும் பணக்காரர்கள் தானேயொழிய சிறு மீனவர்கள் அல்ல என்றும் இழுவலை படகுகளை விட்டுவிட்டு மீண்டும் கரை வலையை உபயோகித்தால் கடல் வளம் பெருகும். கடல் அன்னை பூரிப்பாள், என்கிறார்.

தமிழர் சிங்களர் உறவு : தமிழரும் சிங்களரும் சேர்ந்து இணக்கமாக வாழ்வதற்க்கான வகை பற்றி அவரிடம் கேட்டபோது, சிங்களர்களே சிறுபான்மையினர் மனோநிலையில்தான் உள்ளனர். மற்றவரைக் காட்டிலும் நாம் தாழ்ந்துவிட்டோம் என்ற எண்ணத்தில் எங்களை துன்புறுத்துகின்றனர். இதற்க்கு காரணம் தமிழ்நாடுதான். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக மக்கள் பேச பேச இத்தனை கோடி மக்களின் ஆதரவு இலங்கை தமிழ் மக்களுக்கு இருக்கிறது எங்களுக்கு யாரும் இல்லை என்ற எண்ணம் மேலோங்க எங்களை துன்புறுத்தி இன்பம் காண்கிறார்கள் என்கிறார் விக்னேஸ்வரன் அவர்கள்.

முன்னாள் நீதிபதியான சி.வி. விக்னேஸ்வரன், ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்,  மக்கள் சேவை என்பது ஆன்மீகத்தின் ஒரு பகுதியெனவும் அரசியலுக்கு தானாக வரவில்லை, அரசியலுக்குள் தள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளார். இந்த தேர்தலில் போட்டியிட்டதுதான் அரசியலில் இவரது முதல் பணி.  இவரது பேட்டி முழுவதும் ஆங்கில சொற்றொடர் எதுவும் இல்லாமல் தூய தமிழில் அழகாக உள்ளது. மிகவும் மென்மையான சொற்களைக் கொண்டு தனது கருத்துகளை வெளிப்படுத்தி உள்ளார். போர்க்குற்றங்கள், விடுதலைப்புலிகள் பற்றி எதுவும் கூறவில்லை. தற்போதைய நிலை மற்றும் அதிகார பகிர்வு, போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் குறித்து பேசியுள்ளார்.

வடக்கு மாகாண முதல்வர் என்னும் பொழுது இவரது கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. நாம், தமிழ் நாட்டில் வாழும் தமிழர்கள் இலங்கை குறித்த கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமோ எனத் தோன்றுகிறது.  அங்குள்ள தமிழர்களுக்கு அதிகாரமும் வளமான வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டிய முயற்சிகளை முன்னெடுப்போம்.


மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் வரவேற்கிறேன். இந்த பிரச்னை குறித்த நமது எண்ணத்தை செம்மைப்படுத்த உதவட்டும்.  

Sunday, November 10, 2013

காமன்வெல்த் நாடுகள் அமைப்பும் இலங்கையும்

உலகின்  சில நாடுகள் ஆங்கிலேயர்களால் அடிமைபடுத்தப்பட்டு ஆட்சிச் செய்யப்பட்டது.  பின்பு ஒவ்வொன்றாக சுதந்திரம் பெற்றன. இந்த நாடுகள் அனைத்தும் காமன்வெல்த் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். அடிமைப்படுத்தியதை  ஞாபகப்படுத்தும் இந்த அமைப்பு தேவையா? இந்த அமைப்பின் நிரந்தர தலைவர் இங்கிலாந்தின் ராணி எலிசபெத் அவர்கள்தான். அடிமையான நாடுகளைக் கொண்டு ஒரு சங்கம் அதற்கும் அவர்தான் தலைவர். என்ன விந்தை?

இதன் மொத்த உறுப்பினர் நாடுகள் 53.  அதில் 32 நாடுகள் 15 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட சிறிய தேசங்கள். (நமது சென்னை மாநகர மக்கள் தொகை 89 லட்சங்கள்). மேலும் இதில் 5 நாடுகள் பெரியதாக இருந்த போதிலும்  சரியான வளர்ச்சி அடையாததால் சிறிய நாடுகளின் தொகுப்பில் வருகிறது.  இதில் குறிப்பிடத்தக்க நாடுகள் என்று பார்த்தால் கனடா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா மட்டும்தான். இதிலும் கனடா நாட்டு பிரதமர் இலங்கையில் நடைபெறும் கூட்டத்தை புறக்கணித்து விட்டார். ஆசிய மற்றும் ஐரோப்பா  கண்டங்களில் உள்ள முக்கிய நாடுகளான ரஷ்யா, சீனா, ஜப்பான், கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி போன்றவை இந்த அமைப்பில் அங்கம் வகிக்கவில்லை.

இப்போது இலங்கையில் நடப்பது போல் கடந்த 93ஆம் வருடத்திலிருந்து கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்.  இதில் சுமார் 5 கூட்டங்களில் இந்திய பிரதமர் கலந்து கொள்ளவில்லை. இந்தியாவின் சார்பாக அமைச்சர் ஒருவர்தான் கலந்துகொண்டு இருக்கிறார்.

உப்பு பெறாத விசயத்தை நமது அரசியல்வாதிகள் ஊதி பெரிதாக்கி விட்டார்களோ எனத் தோன்றுகிறது.

இவ்வளவு சாதாரணமான தேவையில்லாத ஒரு அமைப்பின் எந்தவொரு கூட்டத்திலும் இந்திய குடியரசு தலைவரோ அல்லது பிரதமரோ கலந்து கொள்ளவேண்டிய அவசியமில்லை. சரி, ஒரு அமைப்பில் உறுப்பினர் ஆகிவிட்டோம், கூட்டத்தில் கலந்து கொள்வதுதான் முறை என்னும் பட்சத்தில் ஒரு துணை அமைச்சரையோ அல்லது வெளியுறவுத் துறை செயலரையோ அனுப்பி வைக்கலாம். இது போதுமானது.
**********

இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு நியாயமான விசாரணை நடைபெறவில்லை, குற்றவாளிகளை தண்டிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ராஜபக்சே முதல் குற்றவாளி என்பதாக கூறி இந்த காமன்வெல்த் கூட்டத்தை இந்திய அரசு புறக்கணிக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் கோரிக்கை.

இந்திய அரசு இலங்கையின் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதன் காரணம், அது பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் கூட்டு சேர்ந்து இந்தியப் பெருங்கடலில் அவர்களின் ஆதிக்கத்திற்கு தளமாக மாறும், அதை தடுக்கவே இந்தியா இப்படி செயல்படுவதாக சொல்கிறார்கள். 

அளவில், மக்கள் தொகையில் மற்ற  எந்த  வகையில்  பார்த்தாலும் ஒரு சிறிய நாடான இலங்கை இந்தியாவை மறைமுகமாக மிரட்டும் தொனியில் நடந்து கொள்வதா? அதற்கு பதில் வினை செய்வதற்கு இந்தியா தடுமாறுவதா? இந்த சமயத்தில் கடந்த 1987ஆம் ஆண்டு இந்திய விமானப்படையால் நடத்தப்பட்ட,  யாழ்ப்பாணம் மீது உணவு பொருட்களை இறக்கிய “ஆபரேஷன் பூமாலை”  என்ற நிகழ்ச்சியை நினைவு கொள்வோம். நம்மால் முடியும். தலைமையின் கையில்தான் உள்ளது எப்படி செய்வது என்பது.

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதாக கனடா நாட்டு பிரதமர் எப்போதோ அறிவித்து விட்டார். இங்கிலாந்தை ஆதாரமாக கொண்டுதான் இந்த அமைப்பே, எனவே அவர்கள் புறக்கணிக்க முடியாது. ஆனால் இங்கிலாந்து பிரதமர் தான் கலந்து கொள்வதாகவும், அங்கு போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து பேசுவதாகவும் லண்டனில் வெளியாகும் தமிழ் பத்திரிகைகளுக்கு மதிப்பளித்து பேட்டி கொடுக்கிறார். ஆனால் இந்தியா முடிவெடுப்பதில் ஏன் இந்த குழப்பம்? தாமதம்?.

தமிழர்களுக்கு தகுந்த அதிகாரமும், வாழ்வுரிமையும் பெற்று தருவதோடு இலங்கையை நமது நம்பிக்கைக்குரிய ஒரு நட்பு நாடாக மாற்றுவது இந்திய அரசின் பொறுப்பு. இதற்காக எந்தவிதமான அணுகுமுறையை வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம்.  இந்தியாவில் பிறந்த அரசியல் மாமேதை சாணக்கியரின் சாம, தான, பேத, தண்டம் முறைகளை கையாண்டு வெற்றி கொள்ள வேண்டுகிறோம்.
  

Tuesday, November 5, 2013

ஜெயமோகன் அவர்களின் தங்க்லீஷ் யோசனையும் மறுப்பும்

தமிழை இனி ஆங்கில எழுத்துகளில் எழுதலாம் -அதாவது அம்மா என்பது  amma – என்று எழுத்தாளர் ஜெயமோகன், புதிதாக வந்து கொண்டிருக்கும் தி இந்து தமிழ் நாளிதழில் கட்டுரை எழுதியுள்ளார். 
   
நாட்டில் இப்போது மக்களுக்கு அடிப்படை பண்புகள் மறைந்து பொருள் ஒன்றே ஆதாரம் என அதனைச் சுற்றி குணங்களும் அமைந்து வருகின்றன. அறிவை வளர்த்துக்கொள்ள கல்வி என்பதாக இல்லாமல்,  இன்று மருத்துவ, பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு எப்படியாவது  மதிப்பெண் எடுப்பதே குறிக்கோளாக ஆகிவிட்டது. இதைப்போல ஜெயமோகனுக்கு தனது புத்தகம் விற்கவில்லை எனக் கவலை. மக்களின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த முயற்சி செய்வதை விட்டுவிட்டு ஆங்கில புத்தகங்கள் அதிகம் விற்பதால் நாமும் தமிழை ஆங்கிலத்திலேயே எழுதலாம் என்கிறார்.  மிகவும் அபத்தமான ஒரு யோசனை.

எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என தொல்காப்பியன் காலம் முதல் சிறப்பானதொரு இலக்கண அமைப்பைக் கொண்டு, திருக்குறள், ஆத்திச்சூடி, அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம் என இலக்கிய வளங்களோடு வாழ்வாங்கு வளர்ந்து வந்த தமிழ் மொழியை காலத்திற்கேற்ப வளர்க்க வகை செய்யாமல் மற்றொரு மொழியின் பின் மறைந்து கொள்ள சொல்வது சோம்பேறித்தனமும் இயலாமையின் வெளிப்பாடும் ஆகும்.

முதலில் நமக்கு நமது மொழியின் மீது பற்று வேண்டும். மாறி வரும் உலக சூழலுக்கு ஏற்ப மொழியை வளர்க்க முயற்சிகள் செய்ய வேண்டும். எனது தாயினால் எனக்கு பெரிதாக நன்மைகள் எதுவும் இல்லை எனவே, பலவிதமான நன்மைகள் பெற்று தரும் இன்னொரு பெண்ணை எனது தாயாக அமைத்துக் கொள்வேன் என்பது எவ்வளவு மோசமான கற்பனையோ அந்தளவுக்கு மோசமானது தமிழை அப்படியே ஆங்கிலத்தில் எழுதலாம் என்பது. 

இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் தமிழ், அரசு அலுவல் மொழிகளில் ஒன்றாக உள்ளது. உலக மக்கள் அனைவரும் ஆங்கிலம் ஒன்றைத்தான் நம்பி வாழ்ந்து வருகிறார்களா? என்றால், இல்லை. இரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, சீனா, கொரியா போன்ற நாடுகளில் ஆங்கிலத்திற்கு பெரிய முக்கியத்துவம் இல்லை. பல வருடங்களுக்கு முன், ஸ்ரீபெரும்புதூர் அருகே கொரியா நாட்டு கார் கம்பெனியின் தொழிற்சாலை அமைந்தபொழுது அவர்களின் துணை நிறுவனத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.  அங்கு வந்திருந்த கொரிய பொறியாளர்களின்  கணினியில் ஆங்கிலம் இல்லை. பெரும்பாலனவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கவில்லை. 

குழந்தைகள் ஒரே சமயத்தில் இரண்டு எழுத்துருக்களை கற்று கொள்ள சிரமப்படுகிறார்கள் என்னும் இவரது வாதம் சரியானது அல்ல. இளமையில் கல்,  ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? என்னும் சொற்றொடர்கள் பொய் என சொல்வார் போல் உள்ளது. வீண் வாதம்.    முயற்சியும் சரியான பயிற்சியும் இருந்தால் போதும் குழந்தைகள் சாதிப்பது நிச்சயம். குழந்தைகள் கல்வி பயில்வதை மிருகங்களை வித்தைக்கு பழக்குவதோடு ஒப்பிடுகிறார். என்ன கொடுமை? அய்யா, கல்வி என்பது வாழ்க்கையின் அடிப்படை. வித்தை என்பது பிழைப்பு. 

எழுத்துருக்கள் மாறாத அடையாளங்கள் அல்ல என்கிறார். சரிதான், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களால் பெரியாரின் சீர்திருத்த எழுத்துக்கள் தமிழில் நடைமுறைப் படுத்தப்பட்டது. இது போன்று நமது மொழியில் மாற்றங்கள் செய்யலாமே.  அதை விடுத்து எழுத்து, சொல் என்ற இரண்டு அடிப்படைகளை அழித்து இன்னொரு மொழிக்கு மாறி விடுவது நியாயம் அல்ல.  இணையத்தில் வெளியிட ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதாக சொல்லியுள்ளார்.  இது கணினியின் விசைப்பலகையை பயன்படுத்த ஒரு எளிய வழி.  அவ்வளவே.  இதனால் தமிழ் எழுத்தோ, சொல்லோ மாறுவது இல்லை. 

மலாய் போன்ற மொழிகள் ஆங்கில எழுத்துருக்களை பயன்படுத்துவதாக சொல்கிறார். அவர்களை நாமும் பின்பற்ற வேண்டுமென்பது என்ன நியதி? உலகம் முழுதும் போற்றப்படும் திருக்குறளை தந்தார் திருவள்ளுவர். உலகின் பல்வேறு அறிஞர்கள் தமிழ் மொழியின் வளமையால்  ஈர்க்கப்பட்டு தமிழ் பயின்று உள்ளனர்.  ஏன்? சமீபத்தில் கூட வட நாட்டு எம்.பி. ஒருவர் தமிழின் சிறப்பை வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார்.  எனவே உலகமே பின்பற்ற வேண்டும் என்கிற அளவுக்கு தமிழ் மொழியை காலத்திற்கு ஏற்ப அறிவியல் மாற்றங்களுக்கு ஏற்ப வளர்க்க முயற்சிகளை முன்னெடுப்போம். 

யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதானது எங்கும் இல்லை என்ற பாரதியின் கூற்றை மெய்ப்படுத்துவோம்.