Monday, December 9, 2013

நான்கு மாநில மற்றும் ஏற்காடு தொகுதி சட்டமன்ற தேர்தல்

டெல்லி, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் ஆகிய நான்கு மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. இந்த முடிவுகளைப் பற்றிய ஒரு அலசல்.

டெல்லி, ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியும், மத்திய பிரதேசம் மற்றும் சத்திஸ்கரில் பி.ஜே.பி. ஆட்சியும் நடந்து வந்தன.  இதில் டெல்லியை தவிர மற்ற மூன்று மாநிலங்களிலும் தனியாக ஆட்சி அமைக்க கூடிய அளவிற்கு பி.ஜே.பி. பெரும் வெற்றி பெற்றுள்ளது.  டெல்லியில் தனி பெரும் கட்சியாக வெற்றி அடைந்துள்ளது,  எனினும் ஆட்சி அமைக்க இன்னும் நான்கு உறுப்பினர்கள் தேவை.  இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க ஒரு விசயம்,  அர்விந்த் கேஜ்ரிவால் என்பவரால் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி என்ற  புதிய கட்சி டெல்லியில் மொத்தம் உள்ள 70 இடங்களில் 28ல் வெற்றி பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக வந்துள்ளது. இவர் ஊழலுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டி உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹசாரே உடன் இணைந்து இருந்தவர்.

இந்த தேர்தல் முடிவுகளால் தெரிய வருபவை :

காங்கிரசிற்கு மக்கள் ஆதரவு அளிக்கவில்லை. மக்கள் ஒரு நல்ல மாற்று வேண்டுமென விரும்புகிறார்கள்
.
மோடியின் அலை இருப்பதாக சொல்ல இயலவில்லை. ராஜஸ்தானில் வெற்றி பெற்றது இயல்பே என்கிறார்கள். நமது பக்கமுள்ள கேரளவைப்போல் ஆளும் கட்சியை ஒவ்வொரு தேர்தலிலும் மாற்றுவது கடந்த சில தேர்தல்களில்  அங்கு தொடர்ந்து வருகிறது. இப்போதும் அது நடந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் சவுகான் அவர்களின் ஆட்சி சிறப்பானது என மோடியை முன்னிறுத்தும் பொழுதெல்லாம் பேசப்பட்டு வந்துள்ளது. மூன்றாவது முறையாக அவர் முதல்வர் ஆவது அவரது ஆட்சியின் பலனாகும். சட்டிஸ்கரில் முடிவு பி.ஜே.பி. எனினும் காங்கிரஸ் இங்கு நல்ல போட்டியை கொடுத்துள்ளது. ஓட்டு எண்ணிக்கையின் இடையில் காங்கிரஸ் பெரும்பாலான சமயங்களில் முன்னிலையில் இருந்துள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் ?

கடந்த சில தேர்தல்களில் மக்கள் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை அளிக்கவில்லை.  கூட்டணி ஆட்சியே நடந்து வருகிறது.  சுதந்திரத்திற்கு முன்பே இருந்த  கட்சி என்பதால் காங்கிரஸ் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ளது.  அந்த கட்சியாலேயே பெரும்பான்மை பெற இயலவில்லை. அடுத்த பெரிய கட்சியான பி.ஜே.பி க்கு  இந்தியாவின் கிழக்கு, வட கிழக்கு மற்றும் தெற்கு மாநிலங்களில் போதுமான பலம் இல்லை. எனவே இந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கும் என்று தோன்றவில்லை. காங்கிரஸ்க்கு உள்ள எதிர்ப்பு உணர்வை மோடியின் அலையாக மாற்ற பி.ஜே.பி. அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்பது உறுதி. அந்தந்த மாநிலங்களில் உள்ள மாநில கட்சிகள் வெற்றி பெற நல்ல வாய்ப்பு உள்ளது.

ஏற்காடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. கடந்த பல வருடங்களாக தமிழ் நாட்டில் நடைபெறும் சட்டமன்ற இடைதேர்தல்களில் ஆளும் கட்சிதான் வெற்றி பெற்று வருகிறது. எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்று செயல்பட்டு அதனை இரண்டு ஆளும் கட்சிகளும் (தி.மு.க, அ.தி.மு.க)  செய்தும் காட்டி வருகின்றன. இந்த இடைதேர்தல் வெற்றி அல்லது தோல்வியினால் ஆட்சி மாறப்போவது இல்லை. 5 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்யட்டும் என ஒரு கட்சியை மக்கள் தேர்ந்தெடுத்து விடுகிறார்கள். இடையில் ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ. இறந்து விட்டால், அந்த எம்.எல்.ஏ எந்த கட்சியோ அந்த கட்சியே ஒருவரை அந்த இடத்திற்கு நியமித்து கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டால் என்ன?. இதனால் எவ்வளவு பணம், நேரம், அரசுக்கும், கட்சிகளுக்கும் மிச்சம் என்பது உங்களுக்கு தெரியும். இன்னொரு முக்கியமான விசயம், இந்த ஏற்காடு தேர்தலில் தி.மு.க வின் நிர்வாகி ஒருவர் கலவரத்தில் மரணம் அடைந்து விட்டார்.  ஓட்டுக்கு கொடுத்த பணத்தை கணவன் வீண் செலவு செய்துவிட்டதாக சண்டையிட்டு ஒரு பெண் தனது சிறுவயது மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வந்துள்ளது. இதனை எல்லாம் தவிர்க்க  மேற்சொன்னபடி அறிவித்து விடலாமே.


2 comments:

  1. மக்களுக்கு தேவை அர்விந்த் கேஜ்ரிவால் போன்ற தலைவர் நேஷனல் அளவில் தேவைபடுகிறார் ஆனால் சுயநலதுடன் பல மாநில தலைவர்கள் செயல்படுவதால் நமக்கு ஒரு தேசிய தலைவர் கூட கிடைக்கவில்லை அப்படி கிடைத்தால் காங்கிரஸ் பிஜேபிக்கு மாற்றாக ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க மக்கள் தயார். அப்படி இல்லாத வரை எனக்கு அலை உனக்கு அலை இல்லை என்று பேசி திரிவதை கேட்பதை தவிர வேறு வழியில்லை

    ReplyDelete
  2. ///இடையில் ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ. இறந்து விட்டால், அந்த எம்.எல்.ஏ எந்த கட்சியோ அந்த கட்சியே ஒருவரை அந்த இடத்திற்கு நியமித்து கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டால் என்ன?.//

    இடைத்தேர்தல் மூலம்தான் அந்த தொகுதிகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. அதை கெடுக்க ஐடியா கொடுக்கிறீர்களே அது சரியா?

    ReplyDelete