Friday, December 12, 2014

சுதந்திரம் - ஒரு பார்வை.



கொஞ்சம் அவசரப்பட்டுதான் சுதந்திரம் வாங்கிவிட்டோம்!!
இன்னுமொரு 50 வருடங்கள் கழித்து வாங்கியிருக்கலாம்...

அதற்குள் நாடுமுழுவதும் உள்ள அத்தனை நதிகளையும் இணைத்துவிட்டிருப்பான்
அந்த வெள்ளைக்காரன்,
நாம்தான் கூவத்தை கூட தூர்வாறாத கூமுட்டைகளாயிற்றே!

நாடு முழுவதும் எப்போதோ bullet rail வந்திருக்கும்,
நாம் இப்போது தான் மீட்டர்கேஜ்களை broad gauge களாக மாற்ற
போராடிக்கொண்டு இருக்கிறோம்!

ஊட்டி ரயில்பாதையை எப்போதோ இருவழிபாதையாக மாற்றியிருப்பான் அந்த
வெள்ளைக்காரன்,
நாம் இன்னும் தண்டவாளத்தில் சரிந்த மண்ணை வாறுவதற்கு டெண்டர் விட்டுக் கொண்டிருக்கிறோம்!

நாடு முழுவதும் வெள்ளைக்காரனால் கட்டப்பட்ட ஆயிரக்கணக்க்கான கட்டிடங்களும் பாலங்களும் அணைகளும் அப்படியே இருக்க
முந்தாநாள் கட்டிய Airport கட்டிடம் பத்துமுறை விழுந்துவிட்டது!

நாட்டிற்கு வருமானத்தை தரும் சேதுசமுத்திர திட்டத்தை நாற்பது வருடங்களுக்கு முன்னாலேயே நிறைவேற்றி இருப்பான் வெள்ளைக்காரன்!

பணம்பிடுங்கும் பச்சோந்தி கல்விநிறுவனங்களுக்கு பதிலாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்விமுறை வந்திருக்கும்!
நாம் இன்னும் சமச்சீர் கல்விக்கும், இடஒதுக்கீட்டுக்கும்
போராடிக்கொண்டு இருக்கிறோம்!

வெள்ளைக்காரனால் அடிமைப்பட்ட அத்தனை நாடுகளும் இன்று உச்சத்தில் இருக்க நம் நாடு மட்டும் பாதுகாப்பின்றி வயிற்று பசிக்கும் வாழ்க்கை பசிக்கும் மக்களை பலிகொடுத்துக் கொண்டிருக்கிறது,

அடித்து வாங்க சக்தியில்லாமல் அழுதுவாங்கிய சுதந்திரம் என்பதால் ஆளாளுக்கு விளையாடி அக்கறையின்றி தூக்கி எறிந்துகொண்டு இருக்கிறோம்!
மண்ணுக்கு மட்டுமே சுதந்திரம் வாங்கினோம் மக்களுக்கு வாங்க
தவறிவிட்டோம் !

120 கோடி மக்கள் தொகையில்
70
கோடி வறுமைக்கு கீழ்!
பெருமையாய் சொல்லிக்கொள்கிறோம்
70
ஆண்டுகளை நெருங்கிவிட்டோம் என்று!

இன்றுவரை பிளாட்பாரங்கள் நடக்க
பயன்படுவதில்லை நம் நாட்டு ஏழைகள் அங்கு குடியேறி இருப்பதால்!
எப்படி குத்திக்கொள்ளமுடியும் கொடியை,
ஒவ்வொரு முறை குத்தும்போதும் இடறி நெஞ்சுக்குள் குத்துகிறது!

நம்நாட்டு பெண்களை கூட்டம் கூடி கற்பழிக்கும் வரை,
நம்நாட்டு குழந்தைகள் தெருவில் நின்று பிச்சைகேட்கும் வரை,
நம்நாட்டு பெண்சிசுக்கள் கள்ளிப்பாலில் சாகும்வரை
நமக்கெல்லாம் அருகதையில்லை சுதந்திர நாடென்று சொல்லிக்கொள்ள!

ஆண்டுக்கு இரண்டு நாட்களிலும், அண்டை நாட்டு கிரிக்கெட்டிலும்
மட்டும் நாட்டுப்பற்று உயிர்வாழும் என்றால்
நாமதற்கு அடிமைப்பட்டே இருந்திருக்கலாம்
நல்ல காலம் வரும்வரை!

                                  -------------

மேற்கண்ட கருத்துக்கள் நண்பர் ஒருவர் WhatsApp மூலம்  அனுப்பியது. இது சரிதான் எனத் தோன்றுகிறது.

பென்னி குய்க் முல்லை பெரியாறு அணை கட்டியபோதும் காவிரியின் குறுக்கே மேட்டூரில் வெள்ளைக்காரன் அணை கட்டியபோதும் எதிர்ப்போ பிரச்சனையோ வந்ததாக தெரியவில்லை. ஆனால் இப்போது அந்த அணைகளுக்கு தண்ணீர் கொண்டு வர ஆயிரம் பிரச்னைகள்.

இந்தியா முழுவதும் அளந்து அதற்கு சர்வே எண் கொடுத்து ஒவ்வொன்றிக்கும் எல்லை கற்கள் நட்டு, நஞ்சை நிலம், புஞ்சை நிலம், வீட்டு மனை, ஏரி, புறம்போக்கு, இதில் பாதை செல்கிறது என அப்போதே பிரித்து அளந்து வைத்து விட்டான்.  ஆனால் இப்போது அனைவருக்கும் ஆதார் கார்டு கொடுக்க தடுமாறி கொண்டு இருக்கிறோம். முதலில்  ஆதார் கட்டாயம் என்றார்கள். பின்னர் அவசியமில்லை என்றார்கள். மறுபடி இப்போது ஆதார் அட்டைக்கு மக்கள் ஓடிக் கொண்டு இருக்கிறார்கள். 

ஏன் இப்படி?

மக்களுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது. எழுதும் உரிமை, பேசும் உரிமை, வாழும் உரிமை என பல உரிமைகள் கிடைத்துவிட்டன. இதனை ஆக்க பூர்வமாக பயன்படுத்துவது மக்களின் மன நிலையை பொறுத்தது. ஜப்பானில் அரசு பேருந்தின் இருக்கை கிழிந்து இருந்தால் அந்த நாட்டு குடிமகன் அதை உடனே தைக்க தொடங்கி விடுவானாம்.  நமது ஊரில் பக்கத்துக்கு வீட்டுக்காரனோடு சண்டை என்றாலும் அரசு பேருந்தை தான் கல்லெடுத்து அடிக்கிறான். இது சுதந்திரத்தை நாம் பயன்படுத்திக் கொள்ளும் விதம்.

அடுத்தது பணம்.

தான் நன்றாக வாழ வேண்டும் என்றால் பணம் மட்டுமே பிரதான தேவை என்ற பெரும்பான்மையான மக்களின் முடிவும்,  பணம் இருந்தால் தான் மதிக்கப்படுவார் என்ற தற்போதைய நிலையும்  மக்களை பணத்தை தேடி ஓடச் சொல்கிறது. ஆனால், ஒருவனை பணக்காரன் என்று எப்படி முடிவு செய்வது? எங்கள் கிராமத்தில் மோட்டார் பைக் வைத்து இருந்தால் வசதியானவர் என்று அர்த்தம். கார் வைத்து இருந்தால் பணக்காரன் என்று கொள்ளலாம். இங்கு நகரத்தில் ஒரே வீட்டில் 2, 3, கார்கள் கூட உள்ளன. இந்தியாவில் பெரிய பணக்காரர் அம்பானி என்றால் உலகில் அவர் பில் கேட்ஸ் மற்றும் சிலருக்கு குறைந்தவர் ஆகிறார்.  அப்படியென்றால் யார் பணக்காரர்? என்னைக் கேட்டால், கோடி கோடியாக பணம் இருந்தாலும், பணம் இல்லாமல் பிளாட்பாரத்தில்  இருந்தாலும், இரவு சாப்பிட்டுவிட்டு 10 மணிக்கு படுத்தால் காலை 6 மணி வரை எவனொருவன் எந்த தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாக தூங்குகிறானோ அவனே பணக்காரன்.

சரி, விசயத்திற்கு வருவோம்.

இந்த பண விஷயம் மனிதனை படுத்துகிறது. ஜெயலலிதாவிற்கு தண்டனை என தீர்ப்பு சொன்ன நாளில், பேருந்துகள் ஓடாத பொழுது, கோயம்பேட்டிலிருந்து ஆட்டோக்கள் வசூலித்த தொகை, கடைகள் மூடிய நிலையில் இரவில் குழந்தைக்கான பாலிற்கு கூட அநியாய விலை சொன்ன கடைக்காரன் என பல கொடுமைகள். விசாகபட்டினத்தை புயல் தாக்கி சேதப்படுத்திய  நிலையில் குடிக்கும் தண்ணீரை கூட பல பல மடங்கு அதிக விலை கொடுத்த வாங்க வேண்டிய அவலம். எவன் எக்கேடு கெட்டால் என்ன, எனக்கு எப்படியாவது பணம் வேண்டும் என்ற நமது மக்களின் நிலைப்பாட்டை என்னவென்று சொல்வது?  

இதேதான் அரசியல்வாதிகளிடத்திலும். எளிதில் பணம் சம்பாதிக்க அரசியல் ஒரு வழியாகிவிட்டது. கடந்த 50 வருடங்களாக எத்தனை ஊழல்கள். பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால் பதவியில் இருக்க வேண்டும். பதவி என்றால் மக்களுக்கு நல்லது செய்ததாக காட்டவேண்டும். சரியோ, தப்போ என பார்ப்பதில்லை,  மக்களின் உணர்வுகளை தூண்ட கூடிய விஷயங்களை என்றும் அணையாமல் வைத்து மக்களின் காவலன் என காட்டிகொள்ளும் உத்திதான் பல விசயங்களுக்கு நல்ல தீர்வு இல்லாமல் இருந்து வருவது.

வெள்ளைகாரனுக்கு இந்த அவசியம் இல்லை. அவன் இருக்கும் வரை பதவி நிரந்தரம். எனவே அனைத்தையும் ஆராய்ந்து நல்ல பல விசயங்களையும் செய்ய முடிந்தது.

இன்னுமொரு விஷயம், நமது மக்களுக்கு சுதந்திரம், உரிமை என்று கிடைத்துவிட்டதால் இந்த நாடு எனக்கு  எல்லாம் செய்ய கடமைப்பட்டது என்ற எண்ணம் வந்து விட்டது. எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்ற மமதை.

சங்கம் ஒன்று இருக்கிறது. ஒரே மாதிரி தொழில் செய்பவர்கள் அல்லது ஒத்த கருத்து உள்ளவர்கள் ஒன்று கூடி ஒரு அமைப்பை ஏற்படுத்துவது வழக்கம். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதால் ஒன்று கூடி செயல்படும் பொழுது நமது தொழிலுக்கோ அல்லது வாழ்க்கைக்கோ பல நல்ல விசயங்களை செய்ய முடியும். இதில் சேர்ந்த சிலர் நாம் நமது பங்கிற்கு என்ன செய்தோம்? ஆக்க பூர்வ நடவடிக்கையில் பங்கு கொண்டோமா? அல்லது நல்ல யோசனைகள் சொன்னோமா? என்றில்லாமல் சங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சித்து இதை ஏன் என்னைக் கேட்டு செய்யவில்லை? எனக்கு ஏன் அழைப்பில்லை? என் உரிமை என்ன ஆனது? என வீண் விதண்டா வாதங்களிலும் குழப்படி வேலைகளிலும் இருப்பர். இதுதான் நாட்டின் உயர் மட்டம் வரை உள்ளது.

எனவே பணம், சுதந்திரம் இரண்டிலும் ஒரு தெளிவு வேண்டும். கத்தி படத்தில் கம்யூனிசம் என்பதற்கு ஒரு வசனம் வரும்.  உன் பசி தீர்ந்தபிறகும் நீ சாப்பிடும் இட்லி அடுத்தவனுக்கு சொந்தமானது என்று.  இந்த அளவிற்கு இல்லையென்றாலும், பேராசை இல்லாமல் குறைந்த பட்சம் அடுத்தவரை ஏமாற்றாமல் சம்பாதித்தல் நலம்.

எல்லோருக்கும் சுதந்திரமும் உரிமையும் வேண்டும் என்பதுதான் நியாயமான கருத்து. ஆனால் சிலரின் நடவடிக்கையை பார்க்கும் பொழுது அப்படி தேவையில்லையோ எனத் தோன்றுகிறது. வெள்ளைக்காரன் அடக்கி ஆண்டதால் தான் இந்த அணைகளை கட்ட முடிந்ததோ? உரிமையை ஆக்க பூர்வமாக பயன்படுத்தி கொள்ள நமது தகுதிகளை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

எல்லாரையும் நாம் இங்கு குறிப்பிடவில்லை. பொது நலம் கருதி பாடுபட்ட மக்கள் இந்தியாவில் நிறைய பேர் இருந்தனர். இப்போதும் வாழ்ந்து வருகிறார்கள். எல்லா மக்களும் பொது நலத்திற்கென பாடுபட வேண்டும் என்ற அவசியமில்லை. நியாயத்திற்கு ஆதரவாக இருங்கள். அதுவே போதும்.

மேலே சொன்ன விஷயங்கள் அனைத்தும் எனது பார்வையில் எழுதப்பட்டவை. தங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி.

-  கோ. பெருமாள்