Friday, July 31, 2015

பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள்

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏ பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை ஒன்றினை தமிழில் மொழி பெயர்த்து எழுதியுள்ளேன். படித்துப் பாருங்கள்.

நமது இந்தியா மிகச் சிறந்த ஒரு நாடு.

நமது மக்கள் பல துறைகளில் பெரிய வெற்றிகளை அடைந்துள்ளார்கள்.

பால் உற்பத்தியில் உலகில் நாம்தான் முதலிடத்தில் உள்ளோம்.

கோதுமை மற்றும் அரிசி உற்பத்தியில் நமது நாடு உலகின் இரண்டாவது பெரிய நாடு.   செயற்கை கோள் தொழில் நுட்பத்தில் நாம் முன்னிலையில் உள்ளோம்.

தனி மனிதர்கள் நிறைய சாதனைகளை செய்துள்ளனர். டாக்டர் சுதர்சன் என்பவர் பழங்குடியினர் வசிக்கும் ஒரு கிராமத்தை தன்னிறைவு பெற்றதாகவும் சுய சார்பு கொண்டதாகவும் மாற்றி அமைத்துள்ளார்.

இப்படி பல செய்திகள் உள்ளன.  ஆனால் நமது பத்திரிகைகளும் தொலைகாட்சிகளும் இவற்றை பெரிதாக காட்டுவது இல்லை. இதனை விடுத்து நாட்டில் நடக்கும் கொலைகள் மற்றும் குற்றங்கள், விபத்துக்கள், கெட்ட நிகழ்வுகளுக்கே முக்கியத்துவம் தருகின்றன.

நான் இஸ்ரேல் நாட்டின் தலைநகர் டெல் அவிவ் நகருக்கு சென்ற பொழுது அந்த நாட்டின் பத்திரிகை ஒன்றை பார்த்தேன். அப்போது ஹமாஸ் இயக்கம் தாக்குதல் நடத்தி இருந்தது. குண்டு வெடிப்புகளும் மரணங்களும் நிகழ்ந்து இருந்தன. ஆனால் அந்த பத்திரிகையின் முதல் பக்கத்தில் யூதர் ஒருவர் தனது பாலைவன நிலத்தை அழகான ஒரு தோட்டமாகவும் தானியங்கள் விளையும் பூமியாகவும் மாற்றி இருந்த விஷயம் படங்களுடன் இருந்தது. அந்த நாட்டு குடிமகன் முதலில் பார்ப்பது இந்த நல்ல விசயத்தைதான். குண்டு வெடிப்புகள் பத்திரிகையின் உள்ளே மற்ற பக்கத்தில் இருந்தது. ஆனால் நமது நாட்டில் குற்றம், மரணம், திருட்டு, விபத்து என்ற விசயங்கள்தான் முதலிடம் பெறுகின்றன. ஏன் இப்படி எதிர்மறையாக இருந்து வருகிறோம்?

ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். இந்தியா ஒன்றும் வறுமையான, தாழ்ந்த நாடு அல்ல. மிகவும் செழிப்பான வளங்களைக் கொண்ட  வேகமாக வளர்ந்து வரும் ஒரு தேசமாகும்.

ஆனால் உங்கள் கண்ணோட்டத்தில்
நீங்கள் சொல்வீர்கள், இங்கு திறமையான அரசாங்கம் இல்லையென்று..
நீங்கள் சொல்வீர்கள், இங்கு சட்டம் மிகவும் பழமையானதென்று..
நீங்கள் சொல்வீர்கள், இங்கு நகராட்சிகள் குப்பைகளை அகற்றுவது இல்லையென்று..
நீங்கள் சொல்வீர்கள்.. இங்கு சாலைகள் சரியில்லையென்று,  ரயில் குறித்த நேரத்திற்கு வருவது இல்லை, விமானங்கள் சரியில்லை, தொலைபேசிகள் ஒழுங்காக இயங்குவது இல்லை என பல.. பல.

ஆனால், இதே நீங்கள் ஒரு விசயமாக சிங்கப்பூர் செல்கிறீர்கள். அப்போது விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடன் உங்கள் கையில் உள்ள சிகரெட் துண்டை சாலையில் வீச உங்களுக்கு தைரியம் வருமா?

சுத்தமான குளிர்சாதன வசதி உள்ள மெட்ரோ ரயிலில் 40 ரூபாய் டிக்கெட் எடுக்க முரண்டு பிடிக்கும் நீங்கள், அதே சிங்கப்பூரில் பதில் பேசாமல் 60 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து கொண்டு செல்வீர்கள். அங்கு ரயிலில் எச்சில் துப்ப உங்களுக்கு பயம் வரும்.

லண்டன் நகரின் தொலைபேசி துறை ஊழியரிடம் லஞ்சம் கொடுத்து உங்களது வீட்டு தொலைபேசி தொகையை குறைத்து காட்டும்படி உங்களால் சொல்ல முடியுமா?

வாஷிங்டன் நகரில் வேக கட்டுப்பாட்டை மீறி வாகனம் ஓட்டி விட்டு அங்கு உள்ள காவலரிடம் நான் யார் தெரியுமா என உங்களால் பேச முடியுமா?

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டின் கடற்கரைகளில் இளநீர் குடித்துவிட்டு தேங்காயை குப்பை தொட்டியில் போடாமல் அப்படியே எறிந்து விட்டு வரமுடியுமா உங்களால்?

டோக்கியோ நகரின் சாலையில்  வெற்றிலை எச்சிலை துப்ப முடியுமா?
இப்படி ஒவ்வொரு நாட்டிற்க்கும் செல்லும்போது அந்த நாட்டின் சட்டத்தை மதித்து ஒழுங்காக நடந்து வரும் நீங்கள், உங்கள் சொந்த நாட்டில் அப்படி நடப்பதில்லையே. அது ஏன்?

இங்கு நமது விமான நிலையத்தில் வந்து இறங்கியவுடன் காகிதங்களையும், சிகரெட் துண்டுகளையும் சாலையில் எறிய ஆரம்பித்து விடுகிறீர்கள்.

அமெரிக்காவில் ஒருவர் அவரது நாயை வெளியே அழைத்து செல்லும் பொழுது அது சாலையில் அசிங்கம் செய்து விட்டால், அவர்தான் அதனை  சுத்தம் செய்ய வேண்டும். இங்கு நம் நாட்டில் அப்படி நடக்கின்றதா?

தேர்தலில் ஓட்டு போட்டுவிட்டு வந்தவுடன் நமது பொறுப்பு முடிந்து விட்டதாக நினைத்துக் கொள்கிறோம். அரசாங்கம்தான் அனைத்தையும் செய்யவேண்டும் என்ற நினைப்பு. நான் குப்பையை தெருவில் போடுவேன், ஒரு துரும்பைக் கூட எடுத்து குப்பை தொட்டியில் போடமாட்டேன் அது அரசாங்கம் செய்ய வேண்டியது என உட்கார்ந்து கொள்கிறீர்கள்.

ரயிலில் சென்றால் அங்கு  டாய்லெட் சுத்தமாக இருக்கவேண்டும். என எதிர்பார்க்கும் நீங்கள்,  அதை சுத்தமாக வைத்து பயன்படுத்துவதை பற்றி கவலைபடுவதில்லை. அதனை பராமரிக்கும் ஊழியர்களுக்கும் இது பொருந்தும்.

வரதட்சணை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என சமூக பிரச்னைகள் குறித்து போராடும் நீங்கள், உங்களது வீட்டில் அதற்கு எதிர்மாறாக நடந்து கொள்கிறீர்கள். கேட்டால் அதற்கு ஒரு சாக்கு போக்கு சொல்லிக்கொண்டு, மொத்த சமுதாயமும் மாற வேண்டும், நான் என்ன செய்வது. அதற்காக எனது மகனின் தகுதிக்கு வரும் வருமானத்தை விட முடியமா? என்று கேட்கிறீர்கள்.

சமுதாயம் என்பது யார் என்றால் உங்கள் பார்வையில் அது பக்கத்துக்கு மற்றும் எதிர் வீட்டுக்காரர், அடுத்த தெரு மற்றும் ஊரைச் சேர்ந்தவர்கள், இவர்களோடு அரசாங்கம் என்று உள்ளது. ஆனால் சமுதாயம் என்பது என்னையும் உங்களையும் சேர்த்துதான் என்பதை உணர வேண்டும்.

நல்லவர் ஒருவர் வருவார். அவர் ஏதேனும் மாயங்கள் செய்து இந்த சமுதாயத்தை சீர்படுத்தி நன்றாக கொண்டு வருவார் என எதிர்பார்க்கிறீர்கள். ஆனால் அது நம்மிலிருந்து தொடங்க வேண்டும் என உணர்வதில்லை. இல்லையென்றால், வெளிநாடுகளைப் பார்த்து அங்கு சென்றால் நன்றாக இருக்கும் என சொந்த நாட்டிலிருந்து கோழைகளாக அங்கு சென்றுவிடுகிறீர்கள். அங்கும் கூட  நியூயார்க்கில் பாதுகாப்பு பிரச்னை என்றால் லண்டன் சென்று விடுவது, அங்கு வேலைவாய்ப்பு பிரச்னை என்றால் வளைகுடா நாடுகளுக்கு சென்று விடுவது, அங்கு போர் அபாயம் என்றால் சொந்த நாட்டு அரசாங்கமே எங்களை காப்பாற்றி அழைத்து சென்று விடு என்று கோரிக்கை வைப்பது.

ஒருவரும் நமது நாட்டிற்கு ஏதேனும் செய்யவேண்டும் என்று சிந்திப்பது இல்லை. உணர்வுகளை பணத்திற்கு அடமானம் வைத்துவிடுகிறீர்கள்.

இது டாக்டர் அப்துல் கலாம் அய்யா அவர்களின் கட்டுரை.

சமுதாயத்தை சீரமைக்க வேண்டும் என்று பெரிய அளவில் புரட்சிகளை உங்களிடம் எதிர்பார்க்கவில்லை. மாற்றம் என்பது உங்களில் தொடங்க வேண்டும். உங்களால் முடிந்த வரையில் நேர்மையாக சிறந்த குடிமகனாக வாழ முயற்சி செய்யுங்கள்.  ஒவ்வொருவரும் அப்படி வாழ்ந்தால் நாடு முன்னேறுவதில் வல்லரசு ஆவதில் எந்த தடையும் இல்லை.