Sunday, January 22, 2017

தமிழின எழுச்சி


சுமார் 400 ஆண்டுகளுக்கும் மேலான  வரலாற்றில் இப்படியொரு கூட்டத்தை சென்னை கண்டிருக்க வாய்ப்பில்லை.  தலைமை என்று எவரும் இல்லை எனினும், நமக்கு என்ன வேண்டும் என்ற ஒரு தெளிவான முடிவோடு  கட்டுப்பாடான ஒரு போராட்டம் இரவு பகல் என பாராது தொடர்ந்து ஒரு வாரமாக மிக கண்ணியமாக நடந்து வருகிறது.  உலகில் வேறு எங்கும் இப்படி நடந்திருக்குமா என்பதில் ஐயமே.

மெரினாவில் நேரில் கண்ட காட்சிகள் நம்மை தமிழன் என்று சொல்வதில் பெருமை கொள்ள வைக்கின்றன. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பாங்கு, போராடும் களங்களை கையில் உறை மாற்றிக் கொண்டு சுத்தப்படுத்தும் நேர்த்தி, இரவிலும் மகளிர் பாதுகாப்பாக இருக்கலாம் என்ற ஒரு ஒழுங்கு.  என்னவென்று சொல்ல?  உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளன. ஒரு வண்டி நிறைய தண்ணீர் பாக்கெட்டுகளை கொண்டு வந்து வழி நெடுகிலும் கொடுத்து கொண்டே செல்கிறார்கள். இன்னொரு வண்டியில் பிஸ்கட் பாக்கெட்கள் வருகிறது. மற்றுமொரு பக்கத்தில் சாம்பார் சாதமும் அரை லிட்டர் தண்ணீர் பாட்டிலும் கொடுக்கிறார்கள். கலைவாணர் அரங்கம் அருகில் சாலையின் ஒரு புறத்தில் ஒரு பள்ளி மாணவன் வேனில் இருந்து தண்ணீர் பாக்கெட்களை கொடுத்து கொண்டு இருக்கின்றான். சாலையின் மறுபக்கத்தில் ஊனமுற்ற ஒருவர் தண்ணீருக்காக வேண்டி பார்ப்பதை கவனித்து ஒரு பாக்கெட்டை மத்தியில் உள்ள ஒருவரிடம் வீசி அண்ணா அவருக்கு கொடுங்கள் அண்ணா என்கின்றான். பள்ளி சீருடையிலேயே வந்த ஒரு சிறுமி பிஸ்கட் பாக்கெட்களை மெரினாவில் உள்ள நடைபாதையில் அமர்ந்துள்ளவர்களுக்கு கொடுத்துக் கொண்டே செல்கிறாள். ஒரு பெரியவர் வாழைப்பழ சீப்புகளை தட்டு வண்டியில் எடுத்து அனைவருக்கும் கொடுத்து வருகிறார்.   கடந்த 2015ல்  வெள்ளம் வந்த போது நிவாரண பணிகளுக்காக வந்திருந்த வட மாநில உயர் காவல் அதிகாரி,  தான் நாட்டின் பல பகுதிகளுக்கு பேரிடர் நிவாரண பணிக்காக சென்றுள்ளதாகவும் ஆனால் இங்கு சென்னையில்தான் பாதிக்கப்பட்டவர்களை விட உதவி செய்பவர்கள் அதிகம் உள்ளதை  பார்ப்பதாகவும் கூறினார். மீண்டும் தமிழனின் பண்பு உலகுக்கு உணர்த்தப்பட்டுள்ளது.

இரு சக்கர வண்டிகள் வேகம் வேகமாகவும் செல்கின்றன, சில சமயங்களில் உரசல்களும் நடக்கின்றது. ஆனால் எங்கும் சண்டை இல்லை. அனுசரித்து செல்கிறார்கள். நமது நோக்கம் வேறு, இந்த வீண் சண்டை இல்லை என்பது அவர்களின் மனதில் இயல்பாக அமைகிறது.

உலகின் மிகப் பழமையான கலாச்சாரங்களில் தமிழுக்கு பிரதான இடம் உண்டு.  இப்போது சுமார் 70 ஆண்டுகளாகத்தான் நாம் இந்தியன் என அடையாளம் காணப்படுகிறோம். ஆனால் 7000 ஆண்டுகளாக தமிழன் மிகச் சிறப்பாக இருந்து வந்துள்ளான்.

எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என மொழி இலக்கணம் கண்டவர்கள் நாம். இதில் பொருள் என்பது வேறு எந்த மொழியிலும் இல்லை. ஐவகை நிலங்கள், அதற்கான காரணிகள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு என சங்க இலக்கியங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம். மொழிக்கு சிறப்பான ஒரு  இலக்கணம் அமைத்துக் கொடுத்த தொல்காப்பியர், உலகமே வியக்கும் வண்ணம் திருக்குறளை படைத்த வள்ளுவர், கம்பர், இளங்கோவடிகள், அவ்வையார், பாரதி என தமிழுக்கு வளம் சேர்த்தோர் பலர்.

தமிழ் மன்னர்களின் சிறப்பும் போற்றுதலுக்கு உரியது. கிராம சபை அமைத்து பஞ்சாயத்து முறை கொண்டு வந்தது, பாசன வசதிக்கென கட்டிய அணைகள், வெட்டிய கால்வாய்கள், ஆன்மீக பணியாக கட்டிய கோயில்கள், இமயம் வரை வென்ற வீரத்தின் அடையாளம், கடல் கடந்தும் போரிட்ட தீரம், திரைகடலோடி செய்த வாணிகம் என தமிழனின் சிறப்புகள் சொல்லி மாளாது.

ஆனால், இந்திய அரசில் தமிழன் வஞ்சிக்கப்பட்டே வந்துள்ளான்.

வெள்ளையனை எதிர்த்து தோற்று போன ஜான்சி ராணியை பற்றி படித்த நாம், வெற்றி கொண்ட நமது வேலு நாச்சியாரைப் பற்றி அதிகம் படிக்கவில்லை.  

வட நாட்டில் இருந்து மீரா என்பவர் பஜன் பாடல்களைப் பாடி கண்ணனை வணங்கி அவரை மண முடிக்க வேண்டினார். ஆனால் நமது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என போற்றப்பட்டு திருப்பாவை பாடி ஆண்டவனையே மணந்து கொண்டாள். வருடம் தோறும்  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளின் திருமண உற்சவத்திற்கு திருப்பதி திருமலை ஆலயத்திலிருந்து மாலை வருகிறது.

வட நாட்டவர் மீரட் புரட்சியே ஆங்கிலேயரை எதிர்த்த முதல் போர் என்பர். ஆனால் அதற்கு முன்னரே இங்கு வேலூரில் புரட்சி நடந்த வரலாறு உண்டு.

பழமையானதும் மொழி வளம் கொண்டதுமான தமிழை விட இந்தியே உயர்ந்தது என்கின்றனர்.  இலங்கை, சிங்கப்பூரில் தமிழ் ஒரு ஆட்சிமொழி. சிங்கப்பூர் விமான நிலையத்தில் இறங்கினால் உங்களை தமிழ் வரவேற்கும். லண்டன் பி.பி.சி. வானொலி நிலையத்தில் தமிழ் ஒலி பரப்பு எப்போதோ துவக்கப்பட்டது. பி.பி.சி. யின் இந்திய மொழி ஒலிபரப்பில் தமிழே முதலாவது ஆகும். தற்போது தெலுங்கு, மராத்தி, பஞ்சாபி, குஜராத்தி ஆகிய மொழிகளில் 2017ஆம் ஆண்டு தொடங்க இருப்பதாக தகவல்.

காந்தி, நேரு என்ற பெயரில் இங்கு தெருக்கள், நகர்கள் எத்தனை உள்ளன. ஆனால் வட நாட்டில் வள்ளுவன், கம்பன், பாரதி பெயரில் ஒன்றும் இல்லையே. ஏன்? ரூபாய் நோட்டில் எங்கள் வள்ளுவன் படம் இருக்க கூடாதா? கடந்த வருடம் உத்ரகாண்டில் வள்ளுவன் சிலை வைக்க எவ்வளவு சிரமம்?

இப்பொழுதும் கூட தமிழர் அறிவு சால் உலகமாகத்தான் உள்ளது. எத்தனை பணம் கொடுத்தாலும் வெளிநாட்டிற்கு செல்லமாட்டேன் என்று சொல்லி இந்திய அரசில் பணி புரிந்து அணு சோதனை, புதிய ஏவுகணைகள் என கண்ட அய்யா அப்துல்கலாம், செவ்வாய் கிரக விண்வெளி திட்டத்தின் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை, இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் பெரிய தொழில் குழுமமான டாட்டா சன்ஸ் தலைவர் நடராஜன் சந்திரசேகரன், பெப்சி கோ நிறுவனத்தின் தலைவி இந்திரா நூயி, கூகுள் நிறுவன தலைவர் சுந்தர் பிச்சை, நோபல் பரிசு வென்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் என பலர். மிகச் சிறந்த படித்தவர்கள் தமிழ் நாட்டில் உள்ளனர் என பல நிறுவனங்கள் இங்கு அலுவலகம் அமைக்கின்றனர்.   

காவிரி நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தம் 1974ல் முடிந்து அதனை புதிப்பிக்க எத்தனை கஷ்டப்பட வேண்டியுள்ளது. பல ஆண்டுகள் பேசியும் பலனில்லாமல் நடுவர் மன்றம் அமைக்க ஒரு கஷ்டம். 1990ல் அமைந்த நடுவர் மன்றமும் பல ஆண்டுகளாக விசாரித்து இடைக்கால தீர்ப்பு ஒன்று வழங்கி பின்னர் 2007ல் இறுதி தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு அதற்கு அங்கீகாரம் வேண்டி நீதிமன்ற படியேறி கடைசியில் நிறைவேறியது.  ஆனால் நடுவர் மன்றம் கொடுத்த தீர்ப்பின்படி நீர் பங்கீட்டை செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இன்னும் அது மத்திய அரசால் செய்யப்படவில்லை. இதே உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டும்  எத்தனை கெடு விதித்த போதும் மத்திய அரசு சாக்கு போக்கு சொல்லி தட்டி கழித்து விட்டது.  காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருந்தால் காவிரியில் உள்ள அணைகள் அவற்றின் கட்டுப்பாட்டில் வந்திருக்கும். அணைகளின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகம் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் வசம் இருக்கும்.  எந்த மாதத்தில் எவ்வளவு நீர் யாருக்கு என நடுவர் மன்ற தீர்ப்புபடி பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கும். கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் அணை இருப்பதால் தீர்ப்பு கிடைத்தும் பயன் இல்லை. நீரின்றி வாடிய பயிரை கண்டு விவசாயி நெஞ்சடைத்து இறந்துதான் மிச்சம்.

யார் இந்த PETA.  பன்னாட்டு நிறுவனங்களின் வணிக லாபத்திற்காக வளரும் நாடுகளில் அதற்கான செயல்களை செய்வதுதான் இதன் நோக்கம்.  ஒரு வியாபார நிறுவனம் 10 ரூபாய் செலவு செய்யவே லாபம் என்ன வரும் என்று கணக்கு பார்க்கும் இந்த காலத்தில் கோடிகணக்கான ரூபாயை ஒரு N.G.O க்கு எதற்காக கொடுக்க வேண்டும்?  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவும் வாதிக்கும் வழக்குரைஞர்களுக்கு பெருந்தொகையை கட்டணமாக கொடுக்கவும் PETAவிற்க்கு பணம் கிடைப்பது பின் எப்படி? நமது மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்றா இவர்கள் செலவு செய்கிறார்கள்? இல்லை.

முன்பு ஒரிசாவில் நிகழ்ந்த விவரம். உள்ளூர் பசுக்களையும் காளைகளையும் வைத்து விவசாயம் பார்த்து பால் கறந்து கொடுத்து அமைதியாக இருந்த கிராமங்களில் ஜெர்சி பசு கொடுத்து அவற்றின் தீவனம் வளர்க்க நிலம் கொடுத்து மாடு பராமரிக்க பணமும் கொடுத்து ஒரு திட்டத்தை ஆரம்பித்தனர். இத்தனை இலவசத்தை பார்த்து மயங்கிய கூட்டம் அதனை விருப்பத்துடன் செய்தது. ஆனால் ஒரு நிபந்தனை இந்த பசுக்களின் கருத்தரிப்புக்கு உள்ளூர் காளைகளை பயன்படுத்தக் கூடாது. அவர்கள் கொடுக்கும் விந்தணு ஊசிகளைத்தான் பயன்படுத்த வேண்டும். இதனால் பிறக்கும் கன்றுகள் பலம் இன்றி நோஞ்சானாக இருந்தன. அவர்களுக்கு பால் தான் தேவை. கன்றை பற்றி கவலை இல்லை. எனவே புதியதாக காளைகளே அங்கு இல்லை. மேலும் உள்ளூர் காளைகள் காயடிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டன. இப்பொழுது ஒரு காளை இனமே அங்கு இல்லை. பால் கறவை தொழில் உண்டு. அது வசதி படைத்தோர் மற்றும் பெரிய கம்பெனிகள் மட்டுமே செய்ய முடியும். ஏனென்றால் சில வருடம் கழித்து கிராம மக்களிடம் கொடுத்த மாடும் தீவனத்திற்காக கொடுத்த நிலமும் திட்டம் முடிந்து விட்டது என்று சொல்லி திரும்ப வாங்கப்பட்டு விட்டது. ஜெர்சி மாடு வாங்க வேண்டும். அதற்கு தீவனம், விந்தணு ஊசி அனைத்தும் அவர்களிடமே வாங்க வேண்டும். பாலை நாம் விற்றுக் கொள்ளலாம். முடியாவிட்டால் பாலையும் அவர்கள் கேட்கும் விலைக்கு அவர்களிடமே கொடுக்க வேண்டும். என்ன செய்வது?   இப்பொழுது அவர்கள் தொழில் ஏதுமின்றி அடுத்த மாநிலத்திற்கு கட்டிட வேலைக்கு செல்ல வேண்டியதாகிவிட்டது.  இந்த ஜெர்சி பாலில் உள்ள ஒரு வகை கொழுப்புதான் சர்க்கரை நோய் வர காரணம் என்று சொல்லப்படுகிறது.
இந்த பன்னாட்டு நிறுவனங்கள் சர்க்கரை நோயையும் கொடுத்து அதற்கு மருந்தையும் அவர்களே கொடுக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டு மிகவும் தொன்மையானது என்பதற்கு சங்க இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன. கோசலை நாட்டு இளவரசி நப்பினை என்னும் மங்கையை மணப்பதற்காக ஸ்ரீகிருஷ்ணர் ஏழு காளைகளை அடக்கியதாக சொல்லப்படுகிறது. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வார் அவர் எழுதிய பாசுரங்களில் இதனை குறிப்பிட்டுள்ளார். இன்றும் நமது பெருமாள் கோயில்களில் பாடப்படும் திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் எழுதிய பாசுரங்களில் ஜல்லிக்கட்டு பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். (ஜல்லிக்கட்டை ஆதரித்து உச்ச நீதிமன்றத்தில் சுப்ரமணிய சுவாமி தாக்கல் செய்துள்ள மனுவிலும் இதனை சொல்லியுள்ளார்) மேலும் கலித்தொகையில் முல்லை நிலம் குறித்த பாடல்களில் காளையை அடக்கும்  ஏறு தழுவுதல் நிகழ்ந்ததாக பாடப்பட்டு உள்ளது. இந்த இலக்கியங்கள் எவையும் அழிந்துவிடவில்லை. இன்றும் நூலகங்களில் படிக்கலாம். அய்யா மோடி அவர்கள் இவற்றை படித்து அவர் வணங்கும் ஸ்ரீகிருஷ்ணரே காளையை அடக்கியதை கண்டு இதன் தொன்மையையும் பாரம்பரியத்தையும் புரிந்து கொள்ளலாம்.

இன்றும் காளைகளும் பசுக்களும் குடும்பத்தின் ஒரு உறுப்பினராகவே பார்க்கப்படுகின்றன. பெயர் வைத்து அழைப்பதும் உண்டு. வீட்டின் பெண்களும் குழந்தைகளும் அவற்றுடன் ஒன்றி வாழ்ந்து வருவர். தென் மாவட்ட ஊர் ஒன்றில் இறந்து போன மாட்டிற்கு சமாதி கட்டி அதன் மேல் சிலை அமைத்து தினமும் வெளியில் செல்லும்பொழுது வணங்கி விட்டு செல்லும் காட்சியும் உண்டே. மாடு பிடிக்கும் வீரர்களும் ஜல்லிகட்டுக்கு 15 நாட்கள் முன்னாலிருந்து புலால் உண்ணாமல் மது அருந்தாமல் விரதம் இருப்பவர்களும் உண்டு.  அப்படியில்லையென்றால் தெய்வ குத்தமாகிவிடும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு. மாடு முட்டி மாடு பிடிக்கும் வீரனுக்கு ரத்த காயம் வரலாம், ஆனால் மாட்டின் மேல் ஒரு துளி ரத்த காயம் கூட இருக்க கூடாது என்ற மரபில் ஜல்லிக்கட்டு நடத்தும் மாண்பும் உள்ளதென சொல்லப்படுகிறது.

இப்படி பாரம்பரியமும் தொன்மையும் கொண்ட ஒரு வீர விளையாட்டை கடந்த மூன்று வருடங்களாக இந்த அரசியல் கட்சிகள் நடத்த முயற்சி எடுக்காமல் மக்களின் உணர்வோடு விளையாடி விட்டார்கள். இப்போது எழுந்துள்ள இந்த தமிழ் எழுச்சி,  உலகில் ஏற்பட்ட பல புரட்சிகளோடு ஒப்பிட்டு பார்க்கும் வகையில் சிறப்புகளை கொண்டது. வட இந்திய ஊடகங்களும் அறிஞர்களும் தமிழகம் இந்தியாவின் முன்மாதிரி என சொல்ல வைத்த எழுச்சி.  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நமது மாணவ செல்வங்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் அத்துணை விசயங்களும் தெரிந்து வைத்துள்ளனர். 1960ம் ஆண்டின் மிருக வதை தடை சட்டத்தில் எந்த பிரிவுகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்பதை மிக தெளிவாக சொல்கின்றனர். என்ன வேண்டும் என்பதில் அனைவரும் ஒரே கருத்தாக உள்ளனர்.   

பதவி மற்றும் பணத்திற்காக எவர் காலிலும் விழ தயராக இருக்கும் அரசியல்வாதிகளையும் பணம், புகழ் என்றே குறிக்கோளாக இருக்கும் சினிமா நட்சத்திரங்களையும் அண்ட விடாமல், போராட்டத்தை தானே வழி நடத்திய விதம் எப்போதும் கண்டிராதது.  

தன் இனத்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை காக்க ஒரே சமயத்தில் ஒரே குறிக்கோளுடன் கண்ணியமாக அஹிம்சை முறையில் உலகின் அத்துணை பாகங்களிலும் வெகுண்டு எழுந்து குரல் கொடுத்த என் தமிழ் இனமே, உலகின் முதல் தோன்றிய மூத்த குடி.  தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்று சொல்வது வெறும் வாக்கியமல்ல. அது சத்திய வாக்கு.

பணம் பணம் என்றே ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகில், நியாயங்களுக்கு குரல் குடுக்கக் யாரும் இல்லையா? என்று ஏங்கிய பொழுது,  

தமிழ் என்றால் இளப்பமாக நினைக்கும் இந்த கூட்டங்கள் மற்றும் பல ஊடகங்களுக்கு மத்தியில் தட்டி கேட்க யாரும் இல்லையா? என்று விசனப்பட்ட சமயத்தில்

அரசுகள் மற்றும் அரசியல்வாதிகளின் மீது நம்பிக்கையற்று இருந்த வேளையில்

எமது தமிழ் இன மாணவ செல்வங்களும் இளைஞர்களும் நம் இனத்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் காக்க தன் எழுச்சியாக கிளர்ந்து எழுந்து அரசியல் புரட்சியை ஏற்படுத்தியது கண்டு  மிகப்பெருமிதம் கொள்ளும்போது விழியோரம் நீர் துளிர்ப்பதையும் தவிர்க்கமுடியவில்லை.  

தமிழ் வாழ்க

அன்புடன்
பெருமாள்.

  

Friday, July 31, 2015

பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள்

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏ பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை ஒன்றினை தமிழில் மொழி பெயர்த்து எழுதியுள்ளேன். படித்துப் பாருங்கள்.

நமது இந்தியா மிகச் சிறந்த ஒரு நாடு.

நமது மக்கள் பல துறைகளில் பெரிய வெற்றிகளை அடைந்துள்ளார்கள்.

பால் உற்பத்தியில் உலகில் நாம்தான் முதலிடத்தில் உள்ளோம்.

கோதுமை மற்றும் அரிசி உற்பத்தியில் நமது நாடு உலகின் இரண்டாவது பெரிய நாடு.   செயற்கை கோள் தொழில் நுட்பத்தில் நாம் முன்னிலையில் உள்ளோம்.

தனி மனிதர்கள் நிறைய சாதனைகளை செய்துள்ளனர். டாக்டர் சுதர்சன் என்பவர் பழங்குடியினர் வசிக்கும் ஒரு கிராமத்தை தன்னிறைவு பெற்றதாகவும் சுய சார்பு கொண்டதாகவும் மாற்றி அமைத்துள்ளார்.

இப்படி பல செய்திகள் உள்ளன.  ஆனால் நமது பத்திரிகைகளும் தொலைகாட்சிகளும் இவற்றை பெரிதாக காட்டுவது இல்லை. இதனை விடுத்து நாட்டில் நடக்கும் கொலைகள் மற்றும் குற்றங்கள், விபத்துக்கள், கெட்ட நிகழ்வுகளுக்கே முக்கியத்துவம் தருகின்றன.

நான் இஸ்ரேல் நாட்டின் தலைநகர் டெல் அவிவ் நகருக்கு சென்ற பொழுது அந்த நாட்டின் பத்திரிகை ஒன்றை பார்த்தேன். அப்போது ஹமாஸ் இயக்கம் தாக்குதல் நடத்தி இருந்தது. குண்டு வெடிப்புகளும் மரணங்களும் நிகழ்ந்து இருந்தன. ஆனால் அந்த பத்திரிகையின் முதல் பக்கத்தில் யூதர் ஒருவர் தனது பாலைவன நிலத்தை அழகான ஒரு தோட்டமாகவும் தானியங்கள் விளையும் பூமியாகவும் மாற்றி இருந்த விஷயம் படங்களுடன் இருந்தது. அந்த நாட்டு குடிமகன் முதலில் பார்ப்பது இந்த நல்ல விசயத்தைதான். குண்டு வெடிப்புகள் பத்திரிகையின் உள்ளே மற்ற பக்கத்தில் இருந்தது. ஆனால் நமது நாட்டில் குற்றம், மரணம், திருட்டு, விபத்து என்ற விசயங்கள்தான் முதலிடம் பெறுகின்றன. ஏன் இப்படி எதிர்மறையாக இருந்து வருகிறோம்?

ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். இந்தியா ஒன்றும் வறுமையான, தாழ்ந்த நாடு அல்ல. மிகவும் செழிப்பான வளங்களைக் கொண்ட  வேகமாக வளர்ந்து வரும் ஒரு தேசமாகும்.

ஆனால் உங்கள் கண்ணோட்டத்தில்
நீங்கள் சொல்வீர்கள், இங்கு திறமையான அரசாங்கம் இல்லையென்று..
நீங்கள் சொல்வீர்கள், இங்கு சட்டம் மிகவும் பழமையானதென்று..
நீங்கள் சொல்வீர்கள், இங்கு நகராட்சிகள் குப்பைகளை அகற்றுவது இல்லையென்று..
நீங்கள் சொல்வீர்கள்.. இங்கு சாலைகள் சரியில்லையென்று,  ரயில் குறித்த நேரத்திற்கு வருவது இல்லை, விமானங்கள் சரியில்லை, தொலைபேசிகள் ஒழுங்காக இயங்குவது இல்லை என பல.. பல.

ஆனால், இதே நீங்கள் ஒரு விசயமாக சிங்கப்பூர் செல்கிறீர்கள். அப்போது விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடன் உங்கள் கையில் உள்ள சிகரெட் துண்டை சாலையில் வீச உங்களுக்கு தைரியம் வருமா?

சுத்தமான குளிர்சாதன வசதி உள்ள மெட்ரோ ரயிலில் 40 ரூபாய் டிக்கெட் எடுக்க முரண்டு பிடிக்கும் நீங்கள், அதே சிங்கப்பூரில் பதில் பேசாமல் 60 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து கொண்டு செல்வீர்கள். அங்கு ரயிலில் எச்சில் துப்ப உங்களுக்கு பயம் வரும்.

லண்டன் நகரின் தொலைபேசி துறை ஊழியரிடம் லஞ்சம் கொடுத்து உங்களது வீட்டு தொலைபேசி தொகையை குறைத்து காட்டும்படி உங்களால் சொல்ல முடியுமா?

வாஷிங்டன் நகரில் வேக கட்டுப்பாட்டை மீறி வாகனம் ஓட்டி விட்டு அங்கு உள்ள காவலரிடம் நான் யார் தெரியுமா என உங்களால் பேச முடியுமா?

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டின் கடற்கரைகளில் இளநீர் குடித்துவிட்டு தேங்காயை குப்பை தொட்டியில் போடாமல் அப்படியே எறிந்து விட்டு வரமுடியுமா உங்களால்?

டோக்கியோ நகரின் சாலையில்  வெற்றிலை எச்சிலை துப்ப முடியுமா?
இப்படி ஒவ்வொரு நாட்டிற்க்கும் செல்லும்போது அந்த நாட்டின் சட்டத்தை மதித்து ஒழுங்காக நடந்து வரும் நீங்கள், உங்கள் சொந்த நாட்டில் அப்படி நடப்பதில்லையே. அது ஏன்?

இங்கு நமது விமான நிலையத்தில் வந்து இறங்கியவுடன் காகிதங்களையும், சிகரெட் துண்டுகளையும் சாலையில் எறிய ஆரம்பித்து விடுகிறீர்கள்.

அமெரிக்காவில் ஒருவர் அவரது நாயை வெளியே அழைத்து செல்லும் பொழுது அது சாலையில் அசிங்கம் செய்து விட்டால், அவர்தான் அதனை  சுத்தம் செய்ய வேண்டும். இங்கு நம் நாட்டில் அப்படி நடக்கின்றதா?

தேர்தலில் ஓட்டு போட்டுவிட்டு வந்தவுடன் நமது பொறுப்பு முடிந்து விட்டதாக நினைத்துக் கொள்கிறோம். அரசாங்கம்தான் அனைத்தையும் செய்யவேண்டும் என்ற நினைப்பு. நான் குப்பையை தெருவில் போடுவேன், ஒரு துரும்பைக் கூட எடுத்து குப்பை தொட்டியில் போடமாட்டேன் அது அரசாங்கம் செய்ய வேண்டியது என உட்கார்ந்து கொள்கிறீர்கள்.

ரயிலில் சென்றால் அங்கு  டாய்லெட் சுத்தமாக இருக்கவேண்டும். என எதிர்பார்க்கும் நீங்கள்,  அதை சுத்தமாக வைத்து பயன்படுத்துவதை பற்றி கவலைபடுவதில்லை. அதனை பராமரிக்கும் ஊழியர்களுக்கும் இது பொருந்தும்.

வரதட்சணை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என சமூக பிரச்னைகள் குறித்து போராடும் நீங்கள், உங்களது வீட்டில் அதற்கு எதிர்மாறாக நடந்து கொள்கிறீர்கள். கேட்டால் அதற்கு ஒரு சாக்கு போக்கு சொல்லிக்கொண்டு, மொத்த சமுதாயமும் மாற வேண்டும், நான் என்ன செய்வது. அதற்காக எனது மகனின் தகுதிக்கு வரும் வருமானத்தை விட முடியமா? என்று கேட்கிறீர்கள்.

சமுதாயம் என்பது யார் என்றால் உங்கள் பார்வையில் அது பக்கத்துக்கு மற்றும் எதிர் வீட்டுக்காரர், அடுத்த தெரு மற்றும் ஊரைச் சேர்ந்தவர்கள், இவர்களோடு அரசாங்கம் என்று உள்ளது. ஆனால் சமுதாயம் என்பது என்னையும் உங்களையும் சேர்த்துதான் என்பதை உணர வேண்டும்.

நல்லவர் ஒருவர் வருவார். அவர் ஏதேனும் மாயங்கள் செய்து இந்த சமுதாயத்தை சீர்படுத்தி நன்றாக கொண்டு வருவார் என எதிர்பார்க்கிறீர்கள். ஆனால் அது நம்மிலிருந்து தொடங்க வேண்டும் என உணர்வதில்லை. இல்லையென்றால், வெளிநாடுகளைப் பார்த்து அங்கு சென்றால் நன்றாக இருக்கும் என சொந்த நாட்டிலிருந்து கோழைகளாக அங்கு சென்றுவிடுகிறீர்கள். அங்கும் கூட  நியூயார்க்கில் பாதுகாப்பு பிரச்னை என்றால் லண்டன் சென்று விடுவது, அங்கு வேலைவாய்ப்பு பிரச்னை என்றால் வளைகுடா நாடுகளுக்கு சென்று விடுவது, அங்கு போர் அபாயம் என்றால் சொந்த நாட்டு அரசாங்கமே எங்களை காப்பாற்றி அழைத்து சென்று விடு என்று கோரிக்கை வைப்பது.

ஒருவரும் நமது நாட்டிற்கு ஏதேனும் செய்யவேண்டும் என்று சிந்திப்பது இல்லை. உணர்வுகளை பணத்திற்கு அடமானம் வைத்துவிடுகிறீர்கள்.

இது டாக்டர் அப்துல் கலாம் அய்யா அவர்களின் கட்டுரை.

சமுதாயத்தை சீரமைக்க வேண்டும் என்று பெரிய அளவில் புரட்சிகளை உங்களிடம் எதிர்பார்க்கவில்லை. மாற்றம் என்பது உங்களில் தொடங்க வேண்டும். உங்களால் முடிந்த வரையில் நேர்மையாக சிறந்த குடிமகனாக வாழ முயற்சி செய்யுங்கள்.  ஒவ்வொருவரும் அப்படி வாழ்ந்தால் நாடு முன்னேறுவதில் வல்லரசு ஆவதில் எந்த தடையும் இல்லை.


Friday, December 12, 2014

சுதந்திரம் - ஒரு பார்வை.கொஞ்சம் அவசரப்பட்டுதான் சுதந்திரம் வாங்கிவிட்டோம்!!
இன்னுமொரு 50 வருடங்கள் கழித்து வாங்கியிருக்கலாம்...

அதற்குள் நாடுமுழுவதும் உள்ள அத்தனை நதிகளையும் இணைத்துவிட்டிருப்பான்
அந்த வெள்ளைக்காரன்,
நாம்தான் கூவத்தை கூட தூர்வாறாத கூமுட்டைகளாயிற்றே!

நாடு முழுவதும் எப்போதோ bullet rail வந்திருக்கும்,
நாம் இப்போது தான் மீட்டர்கேஜ்களை broad gauge களாக மாற்ற
போராடிக்கொண்டு இருக்கிறோம்!

ஊட்டி ரயில்பாதையை எப்போதோ இருவழிபாதையாக மாற்றியிருப்பான் அந்த
வெள்ளைக்காரன்,
நாம் இன்னும் தண்டவாளத்தில் சரிந்த மண்ணை வாறுவதற்கு டெண்டர் விட்டுக் கொண்டிருக்கிறோம்!

நாடு முழுவதும் வெள்ளைக்காரனால் கட்டப்பட்ட ஆயிரக்கணக்க்கான கட்டிடங்களும் பாலங்களும் அணைகளும் அப்படியே இருக்க
முந்தாநாள் கட்டிய Airport கட்டிடம் பத்துமுறை விழுந்துவிட்டது!

நாட்டிற்கு வருமானத்தை தரும் சேதுசமுத்திர திட்டத்தை நாற்பது வருடங்களுக்கு முன்னாலேயே நிறைவேற்றி இருப்பான் வெள்ளைக்காரன்!

பணம்பிடுங்கும் பச்சோந்தி கல்விநிறுவனங்களுக்கு பதிலாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்விமுறை வந்திருக்கும்!
நாம் இன்னும் சமச்சீர் கல்விக்கும், இடஒதுக்கீட்டுக்கும்
போராடிக்கொண்டு இருக்கிறோம்!

வெள்ளைக்காரனால் அடிமைப்பட்ட அத்தனை நாடுகளும் இன்று உச்சத்தில் இருக்க நம் நாடு மட்டும் பாதுகாப்பின்றி வயிற்று பசிக்கும் வாழ்க்கை பசிக்கும் மக்களை பலிகொடுத்துக் கொண்டிருக்கிறது,

அடித்து வாங்க சக்தியில்லாமல் அழுதுவாங்கிய சுதந்திரம் என்பதால் ஆளாளுக்கு விளையாடி அக்கறையின்றி தூக்கி எறிந்துகொண்டு இருக்கிறோம்!
மண்ணுக்கு மட்டுமே சுதந்திரம் வாங்கினோம் மக்களுக்கு வாங்க
தவறிவிட்டோம் !

120 கோடி மக்கள் தொகையில்
70
கோடி வறுமைக்கு கீழ்!
பெருமையாய் சொல்லிக்கொள்கிறோம்
70
ஆண்டுகளை நெருங்கிவிட்டோம் என்று!

இன்றுவரை பிளாட்பாரங்கள் நடக்க
பயன்படுவதில்லை நம் நாட்டு ஏழைகள் அங்கு குடியேறி இருப்பதால்!
எப்படி குத்திக்கொள்ளமுடியும் கொடியை,
ஒவ்வொரு முறை குத்தும்போதும் இடறி நெஞ்சுக்குள் குத்துகிறது!

நம்நாட்டு பெண்களை கூட்டம் கூடி கற்பழிக்கும் வரை,
நம்நாட்டு குழந்தைகள் தெருவில் நின்று பிச்சைகேட்கும் வரை,
நம்நாட்டு பெண்சிசுக்கள் கள்ளிப்பாலில் சாகும்வரை
நமக்கெல்லாம் அருகதையில்லை சுதந்திர நாடென்று சொல்லிக்கொள்ள!

ஆண்டுக்கு இரண்டு நாட்களிலும், அண்டை நாட்டு கிரிக்கெட்டிலும்
மட்டும் நாட்டுப்பற்று உயிர்வாழும் என்றால்
நாமதற்கு அடிமைப்பட்டே இருந்திருக்கலாம்
நல்ல காலம் வரும்வரை!

                                  -------------

மேற்கண்ட கருத்துக்கள் நண்பர் ஒருவர் WhatsApp மூலம்  அனுப்பியது. இது சரிதான் எனத் தோன்றுகிறது.

பென்னி குய்க் முல்லை பெரியாறு அணை கட்டியபோதும் காவிரியின் குறுக்கே மேட்டூரில் வெள்ளைக்காரன் அணை கட்டியபோதும் எதிர்ப்போ பிரச்சனையோ வந்ததாக தெரியவில்லை. ஆனால் இப்போது அந்த அணைகளுக்கு தண்ணீர் கொண்டு வர ஆயிரம் பிரச்னைகள்.

இந்தியா முழுவதும் அளந்து அதற்கு சர்வே எண் கொடுத்து ஒவ்வொன்றிக்கும் எல்லை கற்கள் நட்டு, நஞ்சை நிலம், புஞ்சை நிலம், வீட்டு மனை, ஏரி, புறம்போக்கு, இதில் பாதை செல்கிறது என அப்போதே பிரித்து அளந்து வைத்து விட்டான்.  ஆனால் இப்போது அனைவருக்கும் ஆதார் கார்டு கொடுக்க தடுமாறி கொண்டு இருக்கிறோம். முதலில்  ஆதார் கட்டாயம் என்றார்கள். பின்னர் அவசியமில்லை என்றார்கள். மறுபடி இப்போது ஆதார் அட்டைக்கு மக்கள் ஓடிக் கொண்டு இருக்கிறார்கள். 

ஏன் இப்படி?

மக்களுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது. எழுதும் உரிமை, பேசும் உரிமை, வாழும் உரிமை என பல உரிமைகள் கிடைத்துவிட்டன. இதனை ஆக்க பூர்வமாக பயன்படுத்துவது மக்களின் மன நிலையை பொறுத்தது. ஜப்பானில் அரசு பேருந்தின் இருக்கை கிழிந்து இருந்தால் அந்த நாட்டு குடிமகன் அதை உடனே தைக்க தொடங்கி விடுவானாம்.  நமது ஊரில் பக்கத்துக்கு வீட்டுக்காரனோடு சண்டை என்றாலும் அரசு பேருந்தை தான் கல்லெடுத்து அடிக்கிறான். இது சுதந்திரத்தை நாம் பயன்படுத்திக் கொள்ளும் விதம்.

அடுத்தது பணம்.

தான் நன்றாக வாழ வேண்டும் என்றால் பணம் மட்டுமே பிரதான தேவை என்ற பெரும்பான்மையான மக்களின் முடிவும்,  பணம் இருந்தால் தான் மதிக்கப்படுவார் என்ற தற்போதைய நிலையும்  மக்களை பணத்தை தேடி ஓடச் சொல்கிறது. ஆனால், ஒருவனை பணக்காரன் என்று எப்படி முடிவு செய்வது? எங்கள் கிராமத்தில் மோட்டார் பைக் வைத்து இருந்தால் வசதியானவர் என்று அர்த்தம். கார் வைத்து இருந்தால் பணக்காரன் என்று கொள்ளலாம். இங்கு நகரத்தில் ஒரே வீட்டில் 2, 3, கார்கள் கூட உள்ளன. இந்தியாவில் பெரிய பணக்காரர் அம்பானி என்றால் உலகில் அவர் பில் கேட்ஸ் மற்றும் சிலருக்கு குறைந்தவர் ஆகிறார்.  அப்படியென்றால் யார் பணக்காரர்? என்னைக் கேட்டால், கோடி கோடியாக பணம் இருந்தாலும், பணம் இல்லாமல் பிளாட்பாரத்தில்  இருந்தாலும், இரவு சாப்பிட்டுவிட்டு 10 மணிக்கு படுத்தால் காலை 6 மணி வரை எவனொருவன் எந்த தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாக தூங்குகிறானோ அவனே பணக்காரன்.

சரி, விசயத்திற்கு வருவோம்.

இந்த பண விஷயம் மனிதனை படுத்துகிறது. ஜெயலலிதாவிற்கு தண்டனை என தீர்ப்பு சொன்ன நாளில், பேருந்துகள் ஓடாத பொழுது, கோயம்பேட்டிலிருந்து ஆட்டோக்கள் வசூலித்த தொகை, கடைகள் மூடிய நிலையில் இரவில் குழந்தைக்கான பாலிற்கு கூட அநியாய விலை சொன்ன கடைக்காரன் என பல கொடுமைகள். விசாகபட்டினத்தை புயல் தாக்கி சேதப்படுத்திய  நிலையில் குடிக்கும் தண்ணீரை கூட பல பல மடங்கு அதிக விலை கொடுத்த வாங்க வேண்டிய அவலம். எவன் எக்கேடு கெட்டால் என்ன, எனக்கு எப்படியாவது பணம் வேண்டும் என்ற நமது மக்களின் நிலைப்பாட்டை என்னவென்று சொல்வது?  

இதேதான் அரசியல்வாதிகளிடத்திலும். எளிதில் பணம் சம்பாதிக்க அரசியல் ஒரு வழியாகிவிட்டது. கடந்த 50 வருடங்களாக எத்தனை ஊழல்கள். பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால் பதவியில் இருக்க வேண்டும். பதவி என்றால் மக்களுக்கு நல்லது செய்ததாக காட்டவேண்டும். சரியோ, தப்போ என பார்ப்பதில்லை,  மக்களின் உணர்வுகளை தூண்ட கூடிய விஷயங்களை என்றும் அணையாமல் வைத்து மக்களின் காவலன் என காட்டிகொள்ளும் உத்திதான் பல விசயங்களுக்கு நல்ல தீர்வு இல்லாமல் இருந்து வருவது.

வெள்ளைகாரனுக்கு இந்த அவசியம் இல்லை. அவன் இருக்கும் வரை பதவி நிரந்தரம். எனவே அனைத்தையும் ஆராய்ந்து நல்ல பல விசயங்களையும் செய்ய முடிந்தது.

இன்னுமொரு விஷயம், நமது மக்களுக்கு சுதந்திரம், உரிமை என்று கிடைத்துவிட்டதால் இந்த நாடு எனக்கு  எல்லாம் செய்ய கடமைப்பட்டது என்ற எண்ணம் வந்து விட்டது. எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்ற மமதை.

சங்கம் ஒன்று இருக்கிறது. ஒரே மாதிரி தொழில் செய்பவர்கள் அல்லது ஒத்த கருத்து உள்ளவர்கள் ஒன்று கூடி ஒரு அமைப்பை ஏற்படுத்துவது வழக்கம். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதால் ஒன்று கூடி செயல்படும் பொழுது நமது தொழிலுக்கோ அல்லது வாழ்க்கைக்கோ பல நல்ல விசயங்களை செய்ய முடியும். இதில் சேர்ந்த சிலர் நாம் நமது பங்கிற்கு என்ன செய்தோம்? ஆக்க பூர்வ நடவடிக்கையில் பங்கு கொண்டோமா? அல்லது நல்ல யோசனைகள் சொன்னோமா? என்றில்லாமல் சங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சித்து இதை ஏன் என்னைக் கேட்டு செய்யவில்லை? எனக்கு ஏன் அழைப்பில்லை? என் உரிமை என்ன ஆனது? என வீண் விதண்டா வாதங்களிலும் குழப்படி வேலைகளிலும் இருப்பர். இதுதான் நாட்டின் உயர் மட்டம் வரை உள்ளது.

எனவே பணம், சுதந்திரம் இரண்டிலும் ஒரு தெளிவு வேண்டும். கத்தி படத்தில் கம்யூனிசம் என்பதற்கு ஒரு வசனம் வரும்.  உன் பசி தீர்ந்தபிறகும் நீ சாப்பிடும் இட்லி அடுத்தவனுக்கு சொந்தமானது என்று.  இந்த அளவிற்கு இல்லையென்றாலும், பேராசை இல்லாமல் குறைந்த பட்சம் அடுத்தவரை ஏமாற்றாமல் சம்பாதித்தல் நலம்.

எல்லோருக்கும் சுதந்திரமும் உரிமையும் வேண்டும் என்பதுதான் நியாயமான கருத்து. ஆனால் சிலரின் நடவடிக்கையை பார்க்கும் பொழுது அப்படி தேவையில்லையோ எனத் தோன்றுகிறது. வெள்ளைக்காரன் அடக்கி ஆண்டதால் தான் இந்த அணைகளை கட்ட முடிந்ததோ? உரிமையை ஆக்க பூர்வமாக பயன்படுத்தி கொள்ள நமது தகுதிகளை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

எல்லாரையும் நாம் இங்கு குறிப்பிடவில்லை. பொது நலம் கருதி பாடுபட்ட மக்கள் இந்தியாவில் நிறைய பேர் இருந்தனர். இப்போதும் வாழ்ந்து வருகிறார்கள். எல்லா மக்களும் பொது நலத்திற்கென பாடுபட வேண்டும் என்ற அவசியமில்லை. நியாயத்திற்கு ஆதரவாக இருங்கள். அதுவே போதும்.

மேலே சொன்ன விஷயங்கள் அனைத்தும் எனது பார்வையில் எழுதப்பட்டவை. தங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி.

-  கோ. பெருமாள்
Tuesday, October 21, 2014

நியாயமில்லாத தமிழ் பட எதிர்ப்பு.

கடந்த ஓரிரு ஆண்டுகளாக சில தமிழ் திரைப்படங்கள் வெளியிட எதிர்ப்புகள் வருவது வாடிக்கையாகி விட்டது. விஸ்வரூபம், துப்பாக்கி, தலைவா வரிசையில் இப்போது கத்தி என்ற படம் வருவதில் சிக்கலாகிவுள்ளது. ஏன் இப்படி?
நமது நாட்டில் ஒரு படம் வெளிவர வேண்டுமென்றால் அது மத்திய அரசின் தணிக்கை துறை குழுவினரால் பார்க்கப்பட்டு தேவைப்படின் சில நீக்கங்கள் / திருத்தங்கள்  செய்யப்பட்டு சான்றிதழ் அளிக்கபடுகிறது. இதன் அடிப்படையில் பொதுமக்கள் பார்க்க திரை அரங்குகளில் வெளியிடப்படுகிறது. அந்த படத்தில் ஏதேனும் தவறான கருத்தோ காட்சியோ இருந்தால் தணிக்கை துறையிடம் அல்லது நீதி மன்றத்தில் முறையிடலாம். இல்லையெனில் அப்போது போராட்டம் கூட செய்யலாம்.  ஆனால் ஒரு படம் வெளியாகும் முன்னரே அதை தடுப்பது எந்த விதத்தில் நியாயம்? சினிமா எடுக்க வந்து கோடிக்கணக்கில் செலவு செய்து படம் விலையாகாமல் வெளியிட முடியாமல் நஷ்டப்பட்டு நலிந்தவர்கள் ஏராளம். உங்கள் எதிர்ப்பை நியாயமாக முறையிடாமல் தியேட்டரை முடக்குவேன், அங்கு பிரச்சனையை ஏற்படுத்துவேன் என்று சொல்வது அராஜகம் அல்லவா?  அதற்கு காவல் துறையும் பேசாமல் ஒதுங்கி கொள்வது முறையாகுமா? இதே எதிர்ப்பை ஆளும் கட்சியோ அல்லது எதிர் கட்சியோ ஒரு அரசியல் கட்சியில் அங்கமாகி உள்ளவர்களின் படத்திற்கு தெரிவிக்க முடியுமா?
கத்தி படத்தை லைகா என்ற நிறுவனம் தயாரிப்பதாகவும் அது இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு தொடர்பானது எனவும் சொல்லி எதிர்ப்பு..  இப்போது அந்த லைகா என்ற பெயர், தலைப்பில் போஸ்டரில் இடம் பெறக் கூடாது என்று சொல்கிறார்களாம். விநோதமாக உள்ளதல்லவா? படத்தில் முதலீடு செய்து விட்டார்கள். படத்தில் லாபமோ நட்டமோ அதுவும் அவர்களை சேரப் போகிறது. இப்போது பெயர் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? இதே நிறுவனம் இதற்கு முன்னரும் தமிழ் திரைப்படங்கள் தயாரித்து உள்ளதாம். அப்போது இவர்கள் எங்கே சென்றார்கள்?
ஒரு அந்நிய நாட்டு நிறுவனம் நமது நாட்டில் ஏதேனும் துறையில் வணிகம் செய்ய விரும்பினால் அதனை அனுமதிப்பதும் விதி முறைகள் வகுப்பதும் மத்திய அரசுதான்.   ராஜபக்சே மீது வெறுப்பு எனில் இவர்கள்  மத்திய அரசிடம்தான்  முறையிட வேண்டும்.  தமிழர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர் எனவே அவர் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இந்தியாவில் வியாபாரம் செய்ய அனுமதிக்க கூடாது எனவும், மீறினால் போராட்டம் செய்வோம் எனவும் சொல்ல வேண்டும். மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் நிறுவனம் இலங்கையில் கம்பெனி ஆரம்பித்து தொழில் செய்து வருகிறது. ஏர்டெல் மற்றும் இன்னும் சில இந்திய நிறுவனங்கள் அங்கு தொழில் செய்து வருகின்றன. இலங்கையில் சிங்கள மக்களுக்கு நீங்கள் பெட்ரோல் கொடுப்பதால் இங்கு உங்களிடம் பெட்ரோல் வாங்க மாட்டோம் என்று இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் போராட்டம் செய்ய வேண்டியதுதானே?. முடியாது. ஏனெனில், காவல் துறையின் நடவடிக்கை அங்கு பாயும்.
உண்மையான எதிர்ப்பு எனில் முறைப்படி செய்து ராஜபக்சே நிறுவனங்கள் இந்தியாவில் நுழைய தடையை பெறுங்கள்.  உங்களை விட எளியோரிடம் உங்கள் வலிமையை காட்டுவது வீரம் அல்ல. சிந்தியுங்கள்.

ஜனநாயக நாட்டில் ஒரு படத்தை முறைப்படி வெளியிட இவ்வளவு சிரமமா? திரைத்துறையிலிருந்து வந்த அம்மாவின் ஆட்சியிலும் இது முறையாகுமா? 

Sunday, May 25, 2014

புதிய இடுகை

நோட்டா  - பலன் உண்டா?

தேர்தலில் போட்டியிடும்  எவருக்கும் வாக்களிக்க விருப்பமில்லையெனில்  இதை பதிவு செய்வதற்காக NOTA (None Of The Above)  என்னும் வசதி வாக்கு பதிவு எந்திரத்தில் இந்த தேர்தலில் செய்யப்பட்டு இருந்தது. உங்கள் வாக்கை வேறு யாரேனும் போட்டு விடாமல் நீங்களே பதிவு செய்தீர்கள் என்ற ஒரு பலனைத் தவிர வேறு எந்த பயனும் இதில் இல்லை. ஒரு தொகுதியில் 100 ஓட்டுகள் உள்ளது என்று வைத்துக் கொள்வோம். அதில் 80 ஓட்டுகள் பதிவாகி அதில் 60 ஓட்டுக்கள் NOTA விற்கும் 1௦ ஓட்டுக்கள் ஒருவருக்கும் 5, 3, 2 என்ற வகையில் ஓட்டுக்கள் மற்ற சிலருக்கும் கிடைத்தது என்றால் 1௦ ஒட்டு வாங்கியவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். அவர்தான் NOTA போட்டவர்களுக்கு சேர்த்து அந்தப் பகுதியின் அரசாங்க பிரதிநிதி. (எம்.பி, எம். எல். ஏ. அல்லது கவுன்சிலர் இப்படி). NOTA வினால்  வந்த பலன் என்ன? ஒன்றும் இல்லை.  பதிவான வாக்குகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் NOTA பெற்று இருந்தால் அந்த தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்படும் என்று விதி இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் அப்படியில்லையே.

மேலும், ஒருவர் தான் செலுத்திய டெபாசிட் தொகையை திரும்ப வாங்க வேண்டுமென்றால் பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு பங்கினைப் பெற்று இருக்க வேண்டும். இப்போது அதற்கான கணக்கில்,  பதிவான வாக்குகளில் NOTA வின் வாக்குகளை கழித்து மீதி உள்ளதில் ஆறில் ஒரு பங்கு வாங்கினால் டெபாசிட் கிடைக்கும் என உள்ளது. NOTA விற்கு போடும் ஓட்டு ஏறக்குறைய செல்லாத ஓட்டு என்ற கணக்கில் வருகிறது. தேவையா இது?

அர்விந்த் கேஜ்ர்வாலின் நாடகங்கள்

அன்னா ஹசாரேவுடன் இணைந்து ஊழல் ஒழிப்பு இயக்கத்தில் இருந்த அர்விந்த் கேஜ்ர்வால் தனியாக வந்து கட்சி ஆரம்பித்து டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு பெரும்பான்மை இல்லாதபோதும் காங்கிரசின் ஆதரவோடு ஆட்சி அமைத்தார். டெல்லியில் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் ஒத்துக் கொள்ளவில்லை என்று கூறி 49 நாட்களிலேயே பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

இப்போது ராஜினாமா செய்தது தப்புதான், மக்கள் மன்னிக்க வேண்டும் என்று கூறி மறுபடியும் ஆட்சி அமைக்க போவதாக கூறினார். காங்கிரஸ் ஒத்துழைக்காது என்று தெரிந்தவுடன் மறுநாள், இல்லையில்லை, தேர்தலை சந்திப்போம் என்று கூறுகிறார். தெளிவான முடிவெடுக்காமல் எத்தனை தடவைதான் மாற்றி மாற்றி பேசுவது?

பா.ஜ.க வின் முன்னாள் தலைவர் நிதின் கட்காரி ஊழல் செய்தார் என இவர் சொல்ல கட்காரி  வழக்கு போட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜரானார் அர்விந்த். நீதிபதி, இவரிடம்  ஜாமீனில் செல்ல ரூபாய் 10000க்கான பிணை பத்திரம் தாக்கல் செய்ய சொன்னார்.  அர்விந்த், அப்படி எந்த பத்திரமும் தாக்கல் செய்ய முடியாது என்று மறுத்துவிட்டார். இது ஒரு சட்ட நடைமுறை, பத்திரம் தாக்கல் செய்தால்தான் ஜாமீனில் விடமுடியும் என்று கூறியும் கேஜ்ர்வால் மறுத்து விட  நீதிபதி இவரை சிறையில் அடைத்துவிட்டார். ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

நாட்டில் அரசியலமைப்பு சட்டம், குற்றவியல் சட்டம் என பல நடைமுறைகள் இருந்து வருகின்றன. உலகின் பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியா இன்னும் ஜனநாயக முறையில் கட்டுக்கோப்பாக இருந்து வருகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் மக்களும் அரசியல் கட்சிகளும் இந்த சட்டங்களை மதித்து நீதி துறையின் நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடந்து வருவதால் தான். அர்விந்த் ஒன்றும் சட்டத்திற்கு மேலானவர் அல்ல. சட்ட நடைமுறைகளின்படி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வதுதான் முறை.


இவர் தன்னை வித்தியாசமாக காட்டிக்கொள்ள இப்படி நடந்து கொள்வது வெறும் நாடகமாக தெரிகிறது.