Tuesday, November 5, 2013

ஜெயமோகன் அவர்களின் தங்க்லீஷ் யோசனையும் மறுப்பும்

தமிழை இனி ஆங்கில எழுத்துகளில் எழுதலாம் -அதாவது அம்மா என்பது  amma – என்று எழுத்தாளர் ஜெயமோகன், புதிதாக வந்து கொண்டிருக்கும் தி இந்து தமிழ் நாளிதழில் கட்டுரை எழுதியுள்ளார். 
   
நாட்டில் இப்போது மக்களுக்கு அடிப்படை பண்புகள் மறைந்து பொருள் ஒன்றே ஆதாரம் என அதனைச் சுற்றி குணங்களும் அமைந்து வருகின்றன. அறிவை வளர்த்துக்கொள்ள கல்வி என்பதாக இல்லாமல்,  இன்று மருத்துவ, பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு எப்படியாவது  மதிப்பெண் எடுப்பதே குறிக்கோளாக ஆகிவிட்டது. இதைப்போல ஜெயமோகனுக்கு தனது புத்தகம் விற்கவில்லை எனக் கவலை. மக்களின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த முயற்சி செய்வதை விட்டுவிட்டு ஆங்கில புத்தகங்கள் அதிகம் விற்பதால் நாமும் தமிழை ஆங்கிலத்திலேயே எழுதலாம் என்கிறார்.  மிகவும் அபத்தமான ஒரு யோசனை.

எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என தொல்காப்பியன் காலம் முதல் சிறப்பானதொரு இலக்கண அமைப்பைக் கொண்டு, திருக்குறள், ஆத்திச்சூடி, அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம் என இலக்கிய வளங்களோடு வாழ்வாங்கு வளர்ந்து வந்த தமிழ் மொழியை காலத்திற்கேற்ப வளர்க்க வகை செய்யாமல் மற்றொரு மொழியின் பின் மறைந்து கொள்ள சொல்வது சோம்பேறித்தனமும் இயலாமையின் வெளிப்பாடும் ஆகும்.

முதலில் நமக்கு நமது மொழியின் மீது பற்று வேண்டும். மாறி வரும் உலக சூழலுக்கு ஏற்ப மொழியை வளர்க்க முயற்சிகள் செய்ய வேண்டும். எனது தாயினால் எனக்கு பெரிதாக நன்மைகள் எதுவும் இல்லை எனவே, பலவிதமான நன்மைகள் பெற்று தரும் இன்னொரு பெண்ணை எனது தாயாக அமைத்துக் கொள்வேன் என்பது எவ்வளவு மோசமான கற்பனையோ அந்தளவுக்கு மோசமானது தமிழை அப்படியே ஆங்கிலத்தில் எழுதலாம் என்பது. 

இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் தமிழ், அரசு அலுவல் மொழிகளில் ஒன்றாக உள்ளது. உலக மக்கள் அனைவரும் ஆங்கிலம் ஒன்றைத்தான் நம்பி வாழ்ந்து வருகிறார்களா? என்றால், இல்லை. இரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, சீனா, கொரியா போன்ற நாடுகளில் ஆங்கிலத்திற்கு பெரிய முக்கியத்துவம் இல்லை. பல வருடங்களுக்கு முன், ஸ்ரீபெரும்புதூர் அருகே கொரியா நாட்டு கார் கம்பெனியின் தொழிற்சாலை அமைந்தபொழுது அவர்களின் துணை நிறுவனத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.  அங்கு வந்திருந்த கொரிய பொறியாளர்களின்  கணினியில் ஆங்கிலம் இல்லை. பெரும்பாலனவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கவில்லை. 

குழந்தைகள் ஒரே சமயத்தில் இரண்டு எழுத்துருக்களை கற்று கொள்ள சிரமப்படுகிறார்கள் என்னும் இவரது வாதம் சரியானது அல்ல. இளமையில் கல்,  ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? என்னும் சொற்றொடர்கள் பொய் என சொல்வார் போல் உள்ளது. வீண் வாதம்.    முயற்சியும் சரியான பயிற்சியும் இருந்தால் போதும் குழந்தைகள் சாதிப்பது நிச்சயம். குழந்தைகள் கல்வி பயில்வதை மிருகங்களை வித்தைக்கு பழக்குவதோடு ஒப்பிடுகிறார். என்ன கொடுமை? அய்யா, கல்வி என்பது வாழ்க்கையின் அடிப்படை. வித்தை என்பது பிழைப்பு. 

எழுத்துருக்கள் மாறாத அடையாளங்கள் அல்ல என்கிறார். சரிதான், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களால் பெரியாரின் சீர்திருத்த எழுத்துக்கள் தமிழில் நடைமுறைப் படுத்தப்பட்டது. இது போன்று நமது மொழியில் மாற்றங்கள் செய்யலாமே.  அதை விடுத்து எழுத்து, சொல் என்ற இரண்டு அடிப்படைகளை அழித்து இன்னொரு மொழிக்கு மாறி விடுவது நியாயம் அல்ல.  இணையத்தில் வெளியிட ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதாக சொல்லியுள்ளார்.  இது கணினியின் விசைப்பலகையை பயன்படுத்த ஒரு எளிய வழி.  அவ்வளவே.  இதனால் தமிழ் எழுத்தோ, சொல்லோ மாறுவது இல்லை. 

மலாய் போன்ற மொழிகள் ஆங்கில எழுத்துருக்களை பயன்படுத்துவதாக சொல்கிறார். அவர்களை நாமும் பின்பற்ற வேண்டுமென்பது என்ன நியதி? உலகம் முழுதும் போற்றப்படும் திருக்குறளை தந்தார் திருவள்ளுவர். உலகின் பல்வேறு அறிஞர்கள் தமிழ் மொழியின் வளமையால்  ஈர்க்கப்பட்டு தமிழ் பயின்று உள்ளனர்.  ஏன்? சமீபத்தில் கூட வட நாட்டு எம்.பி. ஒருவர் தமிழின் சிறப்பை வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார்.  எனவே உலகமே பின்பற்ற வேண்டும் என்கிற அளவுக்கு தமிழ் மொழியை காலத்திற்கு ஏற்ப அறிவியல் மாற்றங்களுக்கு ஏற்ப வளர்க்க முயற்சிகளை முன்னெடுப்போம். 

யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதானது எங்கும் இல்லை என்ற பாரதியின் கூற்றை மெய்ப்படுத்துவோம். 


No comments:

Post a Comment