Saturday, February 22, 2014

ராஜீவ் காந்தி கொலையும் கைதிகள் விடுதலையும்

இப்போது மக்களிடையே விவாதத்தில் உள்ள முக்கியமான ஒரு விசயம். என்னுடைய கருத்து இவர்களை விடுதலை செய்யலாம் என்பதே. காரணங்களை விவரித்துள்ளேன்.  வாசித்து பார்க்கவும்.

1.       ராஜீவ் காந்தியின் கொலை இந்தியாவிற்கு எதிரான ஒரு தீவிரவாத செயல் என கருத முடியாது என்று உச்ச நீதிமன்றம் 08.10.1999 அன்று தனது தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளது.  ஒருவர் (ராஜீவ் காந்தி) எடுத்துள்ள முடிவினால் பாதிக்கப்பட்ட இன்னொருவர்  (பிரபாகரன்) செய்த செயல். இந்திய அரசாங்கத்திற்கு எதிராகவோ இந்திய மக்களுக்கு எதிராகவோ விடுதலை புலிகள்  போரிடவில்லை. ராஜீவ் காந்தியை தவிர மற்ற இந்தியர் யாரையும் கொல்லும் நோக்கம் அவர்களுக்கு இருந்ததாக நிருபீக்க ஆதாரங்கள் இல்லை. எனவே இந்தக் குற்றம் தடா சட்டத்தின் கீழ் வராது என உச்ச நீதிமன்றம் உறுதி செய்கிறது. எனவே வட இந்திய தொலைக்காட்சிகள் கூச்சலிடுவது போல் இதை ஒரு பயங்கரவாத செயல், தீவிரவாதிகள் என்றெல்லாம்  எடுத்துக் கொள்வது தவறு.

2.       இந்தக் கொலையில் நேரடியாக சம்பந்தபட்டதாக கூறப்படும் பிரபாகரன், பொட்டு அம்மன், சிவராசன், தனு போன்றவர்கள் இப்போது உயிருடன் இல்லை. இந்த கைதிகள் துணையாக இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.  அதுவம் பேரறிவாளன் குற்றம் என்னவென்றால், பேட்டரி செல் வாங்கி கொடுத்ததாம். இந்த செல் இதற்குதான் வாங்கினாரா? போன்ற பல வினாக்களுக்கு பதில் இல்லை. இதற்காக 20  வயதில் சிறைக்கு சென்றவர்க்கு இன்று வயது 43 ஆகிறது.


3.       மிகக் கொடுமையான தடா சட்டத்தின் கீழ் இந்த வழக்கு விசாரணை நடை பெற்றது. வெளி உலகிற்கு தெரியாமல், மூடிய அறைக்குள் நடந்த இந்த விசாரணையில் நியாயமான உரிமைகளுக்கு இடம் இல்லை. நீதிமன்றத்தில் ஆஜர் செய்யாமல் 60 நாட்கள் வரை சிறையில் வைக்கலாம். போலிஸ் விசாரணையில் வாங்கப்பட்ட வாக்குமூலத்தை கோர்ட் ஏற்றுக் கொள்ளும். யார் யார் சாட்சிகள், அவர்களின் சாட்சியங்கள் என்ன? என்பதெல்லாம் வெளியில் தெரியாது. அப்பொழுது கைது செய்யப்பட்ட ஆதிரை என்பவருக்கு வயது 17தான். பெரிய சட்ட வல்லுனர்களே அதிர்ச்சி அடையும் வண்ணம் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் மரண தண்டனை அளித்தது தடா நீதிமன்றம். இது நியாயமாக நடந்த விசாரணை அல்ல என பல மனித உரிமை அமைப்புகள் கூறின.  நல்லவேளை இப்போது தடா என்னும் சட்டம் இல்லை.

4.       ராஜீவ் காந்தி கொலை மற்றும் அதன் பின்னணிகளை பற்றி விசாரிக்க நீதிபதிகள் வர்மா கமிசனும் மற்றும் ஜெயின் கமிசனும் அமைக்கப்பட்டன. இவர்கள் பல விவரங்களை கண்டுபிடித்துக் கூறினார்கள். ராஜிவ் காந்தியின் பாதுகாப்பில் குறைபாடுகள் இல்லை. ஆனால் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் அதில் மாற்றங்களை செய்து தொந்தரவு செய்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தியின் பயண விவரம் சிவராசனுக்கு தெரிந்தது எப்படி என்பதற்கு இன்று வரை பதில் இல்லை. சந்திராசாமி என்பவரைப் பற்றியும் குற்றம் சொல்லப்பட்டது. நீதிபதிகள் கொடுத்த அறிக்கைகளின்படி எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சி.பி.ஐயில் பணி புரிந்த ரகோத்தமன் என்பவர் இந்த கொலையில் இன்னும் சிலர் சம்பந்தபட்டுள்ளதாக கூறியுள்ளார்.

5.       இவர்கள் இந்த கொலையின் மூலம் நேரடியாக எந்த பலனையும் பெற்றதாக தெரியவில்லை. ஆதாயதிற்க்கான கொலை என்று சொல்ல முடியாது. கொலைக்கான திட்டங்கள் 1987லிருந்து
தொடங்கப்பட்டதாக விசாரணைகளில் தெரிகிறது. இதற்கு மூலமாக இருந்தவர்கள், உதவியவர்கள் என பலர் இன்னும் வெளியில் தெரியவில்லை அல்லது மறைக்கபடுகிறார்கள்.

சி.பி.ஐ. விசாரணை, வர்மா மற்றும் ஜெயின் கமிசனின் அறிக்கைகள், தடா கோர்ட்டின் விசாரணை, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புகள் போன்ற அனைத்தையும் பார்க்கும்பொழுது 23 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ள இவர்களை விடுதலை செய்யலாம் எனத் தோன்றுகிறது.  பிரதமரை கொன்றவர்களுக்கே விடுதலையா என உணர்ச்சி வசப்பட்டு பேசாமல் இதில் உள்ள அனைத்து உண்மைகளையும் இவர்களது பங்கினையும் யோசித்து முடிவு எடுக்க வேண்டும். நீதி தேவதையின் கண்கள் கறுப்பு துணியால் கட்டப்பட்டு இருக்கும். ஏன் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். ஒரு வழக்கில் விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடாமல், வேண்டியவர் வேண்டாதவர் என பாராமல் வழக்கின் உண்மை தன்மையைக் கொண்டு விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும். அதைத்தான் உச்ச நீதிமன்றமும் இப்போது செய்துள்ளது.


மாற்று கருத்துக்கள் இருப்பின் வரவேற்கப்படுகிறது.

No comments:

Post a Comment