Wednesday, February 12, 2014

லோக்சபாவும் ராஜ்யசபாவும்


கடந்த 27.08.2010 அன்று நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சம்பளத்தை ரூபாய்16000 லிருந்து   50000 ஆகவும், தொகுதி பணிக்கென 20000லிருந்து  45000 எனவும்,  அலுவலக செலவுக்கென 20000 லிருந்து 45000 எனவும் ஆக மொத்தம் மாத சம்பளத்தை ரூ. 56000 லிருந்து ரூ.140000 ஆக உயர்த்திக் கொண்டார்கள். மற்ற சலுகைகளும் ஏராளம்.  இலவச தொலைபேசிகள், மின்சாரம், தண்ணீர், குடியிருக்க  பங்களா, இலவச விமான மற்றும் ரயில் பயணங்கள் (மனைவிக்கும் சேர்த்து),  வாகனம் வாங்க வட்டியில்லா கடன் இன்னும் பிற.

இதைத் தவிர பார்லிமென்ட் கூட்டம் நடைபெறும் பொழுது அதில் கலந்து கொள்ள தினசரி ரூ.1000 என இருந்ததை ரூ. 2000 என உயர்த்திக் கொண்டார்கள். இதற்கு உள்ளே சென்று அவையில் பேச வேண்டும் என்றில்லை.  வெளியில் உள்ள ரெஜிஸ்டரில் கையெழுத்து போட்டாலே போதும்.  சம்பளம், படிகள் மற்ற சலுகைகள் எல்லாம் சேர்த்து ஒரு எம்.பி பெறும் வருட ஊதியம் சுமார் 40லட்சங்களைத் தாண்டும். இதற்கு எந்த பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ படிக்க வேண்டும் என்ற அவசியமேயில்லை. 5 வருட காலத்திற்கும் இந்த 534 எம்.பி.களுக்கும் ஆகும் மொத்த செலவு ஆயிரம் கோடிகளுக்கும் அதிகம் ஆகும். 

இப்படி இவர்கள் சம்பளத்தை மூன்று மடங்காக உயர்த்திக் கொண்ட சமயத்தில்தான் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் ஊழல் என்று செய்தி வந்தது. டீசல், பெட்ரோல் விலைகள் உயர்த்தப்பட்டன. சிலர், இந்த நேரத்தில் இந்த சம்பள உயர்வைப் பற்றி பேச வேண்டாம் என சொல்லியதாகவும் தகவல் உண்டு.. அதே சமயத்தில் லல்லு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ், மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்தவர்கள் இந்த உயர்வு போதாது, 16000லிருந்து  50000அல்ல, 80001ஆக உயர்த்த வேண்டும் என்று பேசியதாக  செய்திகள் சொல்கின்றன. (80000 என்பது  IAS முடித்த ஒரு மத்திய அரசு செயலாளர் வாங்கும் மாத ஊதியம், அதை விட ஒரு ரூபாய் தாங்கள் அதிகம் வாங்க வேண்டும் என்பது இவர்களின் ஆசை)

சரி, இவ்வளவும் எதற்காக?  நமது இந்திய மக்களின் வாழ்வை மேம்படுத்த, இந்திய நாட்டை வளமாக்க நல்ல பல திட்டங்களும் சட்டங்களும் கொண்டு வந்து அதனை ஆரோக்கியமான முறையில் விவாதித்து திருத்தங்கள் தேவைப்படின் அவற்றை செய்து செம்மையான ஒரு ஆட்சி முறை நடக்க இவர்கள் உழைப்பார்கள் என்பதற்குதான், சுமாராக பத்து லட்சம் மக்களுக்கு ஒருவர்  என்ற வகையில் இவர்களை தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்துள்ளோம்.

1952ஆம் ஆண்டிலிருந்து இதுவரை நடைபெற்ற பார்லிமென்ட் கூட்டங்களில் இப்போதைய லோக்சபா மற்றும் ராஜ்யசபா போல் மோசமாக எப்போதும் இருந்ததில்லை என சொல்லப்படுகிறது. எந்தவொரு பிரச்சனைக்கும் கூடி கலந்து பேசி, விவாதித்து முடிவு காண்போம் என்றில்லாமல் கூச்சலிடுவதும் பேப்பர்களை கிழிப்பதும் மற்றவரை பேச விடாமல் தடுத்து அவையை முடக்குவதும் எந்த விதத்தில் நியாயம்?
ஒரு விசயத்தின் சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து நல்ல முடிவு எடுக்காமல், நடு அவைக்கு வந்து வெறும் கூச்சலிடுவதால் எந்த தீர்வும் கிடைக்காது.  மற்றும்  இவர்களை நல்லவர்கள், அறிவாளிகள் என நம்பி அனுப்பி வைத்த மக்களை கேவலப்படுத்துவதாகவும்  உள்ளது.

இதற்கு என்னதான் தீர்வு?

  1. நாட்டில் எல்லா அரசு வேலைகளுக்கும் ஊதியத்தை நிர்ணயம் செய்ய ஒரு குழுவை அமைத்து அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசு ஊழியர், ஆசிரியர், வங்கி பணியாளர் போன்றவர்களுக்கு சம்பளத்தை நிர்ணயம் செய்வதுபோல் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு நிபுணர் குழுவின் பரிந்துரை அடிப்படையில் சம்பளம் நிர்ணயித்தல் வேண்டும். தங்களுக்கு தாங்களே ஊதியத்தை நிர்ணயிப்பது நியாயம் அல்ல.
  2. மீண்டும் மீண்டும் தேவையில்லாத குழப்பம் விளைவிக்கும் எம்.பி.க்களை தகுந்த விசாரணை செய்து அதன் அடிப்படையில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பதவி நீக்கம் செய்யலாம்.
கருத்துக்களை மறுமொழியில் தெரியப்படுத்தவும்.




No comments:

Post a Comment