Sunday, September 29, 2013

BE POSITIVE

உள்ளூர் நண்பன் முதல் உலக பேரறிஞர் வரை பலர் இந்த தலைப்பில் நிறைய பேசியுள்ளனர்.  எழுதியும் உள்ளனர். மனதின் அமைப்பு, அதில் ஏற்படும் எண்ணங்கள், அதன் தாக்கங்கள் என பலவித கோணங்களில் அலசப்பட்டு எழுதப்பட்டுள்ளது. 

என் பங்கிற்கு இப்போது........

ஒரே ஒரு விஷயம் மட்டும்.  நிகழ்வுகளை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதை பற்றி.....

ஒரு நிகழ்வில் நாம் எதிர்பார்த்தபடி  முடிவு இருந்தாலோ அல்லது லாபமான விஷயம் எனில்  மகிழ்ச்சி, இல்லையென்றால் வருத்தம். ஆனால் எந்த ஒரு விசயத்திலும் இன்பம், துன்பம், மகிழ்ச்சி, வருத்தம் என்பது அவரவர் அந்த விசயத்தை எப்படி எடுத்து கொள்கிறார்கள் என்பதில் இருக்கிறது என சொல்லப்படுகிறது. 

நான் ஒரு கம்பெனியில் பணி புரியும்பொழுது மும்பையில் ஒரு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன். அந்த பயிற்சியை நடத்தியவர் சொன்னது: எல்லா விசயங்களிலும் நல்லதும் உள்ளது. கெட்டதும் உள்ளது.  நீங்கள் அதில் உங்களுக்கு நல்லது என தோன்றும் கருத்தை மட்டும் உள்வாங்கி அதன் அடிப்படையில் அந்த விசயத்தை பார்க்கவேண்டும். எல்லா நிகழ்விற்கும் இது பொருந்தும் என்றார். (இறப்பிற்கும் கூட.) அவரது தந்தை இறந்த விசயத்தைப் பற்றிக் கூறினார். அவரது பெற்றோர் ஆன்மீக பயணமாக ஹரித்வார், ரிஷிகேஷ் போன்ற இடங்களுக்கு சென்ற பொழுது ஒரு இரவில் பேருந்தில் வந்ததாகவும், காலையில் பார்க்கும்பொழுது அவர் அப்பா உயிருடன் இல்லை என்றார். இது மிகவும் துக்கமான விஷயம். எனினும் இவர் இதில் மற்ற விசயங்களையும் பார்க்க வேண்டும் என்கிறார். 1. தூக்கத்தில் உயிர் பிரிந்து விட்டது. நோய் வயப்பட்டு படுத்த படுக்கையில் கஷ்டப்பட வில்லை. அமைதியான நிகழ்வு. 2. இவருடன் சேர்த்து நான்கு  மகன்கள். நால்வரும் நல்ல நிலையில் உள்ளனர். மகன்கள் அனைவருக்கும் செய்யவேண்டியதை செய்துள்ளார். 3. இவரது அம்மாவின் மடியில் இருக்கும் பொழுது உயிர் பிரிந்துள்ளது. எங்கோ அனாதையாக இறக்கவில்லை. 4. கோயில்களுக்கு செல்லும் வழியில் கடவுளின் அருகில் இறந்துள்ளார்.  இப்படி சுமார் 9 விசயங்களை கூறினார்.   எந்த ஒரு விசயத்திலும் நல்லதொரு கருத்து கண்டிப்பாக இருக்கும் என்கிறார். கீதையில் சொல்வது போல எது நடந்தாலும் நல்லதிற்கே என கொள்வோம். 

நல்ல மழை பெய்கிறது என்று வைத்துக்கொள்வோம்.  ஒரு வேலைக்கும் வெளியில் போக முடியவில்லை. வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டியுள்ளது என்றால் வருத்தம். இந்த வருடமாவது நல்ல மழை பெய்யட்டும். தண்ணீர் பஞ்சம் தீரும் என்று நினைத்தால் சந்தோசம்.

இந்த பழமொழிகளைப் பாருங்கள்.

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.
பன்றியோடு சேர்ந்த கன்றும் கெடும்.
ஆள் பாதி, ஆடை பாதி.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
தாயும் பிள்ளையுமென்றாலும் வாயும் வயிறும் வேறு.
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்.
  
ஒன்றுக்கொன்று முரணாக உள்ளதல்லவா? அப்படியென்றால் பழமொழிகள் தப்பா?  இல்லை. பழமொழிகள் எப்போதும் தப்பானவை அல்ல.  அவை வாழ்க்கையை வாழ்ந்த அனுபவத்தில் சொன்னவை. இவை ஒவ்வொன்றையும் அந்தந்த இடம் மற்றும் பொருள் கொண்டு அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படித்தான் நிகழ்வுகளையும் பலவிதமாக அர்த்தப்படுத்தலாம்.  நல்லதை மட்டும் சீர் தூக்கி பார்த்து அணுக வேண்டும்.

ஒரு நதி ஓடி கொண்டு உள்ளது. அதன் கரையில் உள்ள மரத்திலிருந்து இரண்டு இலைகள் நதியில் விழுந்து விட்டன. இரண்டும் நதியின் ஓட்டத்தில் அடித்து செல்லப்படுகின்றன. ஒரு இலையின் நினைப்பு : நாந்தான் இந்த நதியை நடத்தி செல்கிறேன். என் பின்னால்தான் இந்த நதி வருகிறது என்று அந்த இலை சந்தோசமாக செல்கிறது.  இன்னொரு இலையின் நினைப்பு : இந்த நதி என்னை தள்ளுவதா? நான் இந்த நதியை தடுத்து நிறுத்துகிறேன் பார் என்று முட்டி மோதி வருத்தத்தில் வருகிறது.
நிகழ்வு ஒன்றுதான்.  ஆனால் அதை எடுத்து கொள்கிற விதம்தான் இன்பமா துன்பமா என தீர்மானிக்கிறது.

கடைசியில் ஒன்று.  அந்த கடவுளே நினைத்தாலும் நடந்ததை மாற்ற முடியாது.  நடந்தது நடந்துதான்.  அதில் வருத்தப்படவேண்டியதை தூர எறிந்து நல்லதை மட்டும் நினைத்து அடுத்த அடியை நம்பிக்கையுடன் எடுத்து வைப்போம்.

வாழ வேண்டிய இனிமையான தருணங்கள் காத்திருக்கின்றன.





3 comments:

  1. Excellent.Keep it up.Got instant inspiration and I wll try to keep the same in upcoming days

    ReplyDelete
  2. Excellent.Keep it up.Got instant inspiration and I wll try to keep the same in upcoming days

    ReplyDelete
  3. //அந்த கடவுளே நினைத்தாலும் நடந்ததை மாற்ற முடியாது. நடந்தது நடந்துதான்.//
    அட

    ReplyDelete